சென்னை: மறைந்த முதுபெரும் தலைவரான குமரிஅனந்தனின் மறைவு குறித்து, அவரது மகள் தமிழிசையின் வீட்டுக்கு வந்து துக்கம் விசாரித்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள குமரிஅனந்தன் உருவப்படுத்துக்கு மலர்தூவி மரியாதை செய்தார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று இரவு சென்னை வந்தார். கிண்டியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்கி இருக்கிறார். இன்று பல்வேறு கட்சி தலைவர்களை அவர் சந்திக்க உள்ளார். 2026 தேர்தல் கூட்டணி தொடர்பாக, பாஜக, அதிமுக உள்பட சில கட்சி நிர்வாகிகளை சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின்போது, தேசிய ஜனநாயக கூட்டணி குறித்த முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், இன்று காலை உள்துறை அமைச்சர் அமித்ஷா, விருகம்பாக்கத்தில் உள்ள பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இல்லத்திற்கு வருகை தந்தார். அங்கு முன்னாள் கவர்னரும், மூத்த பாஜக உறுப்பினருமான தமிழிசையை சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து,. முதுபெரும் தலைவரும், தமிழிசை சவுந்தரராஜனின் தந்தையுமான குமரி அனந்தனின் உருவப்படத்திற்கு மத்திய அமைச்சர் அமித் ஷா மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், தமது தந்தையின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். உள்துறை அமைச்சரே வந்திருக்கிறார் என்பதை நினைக்கும்போது விண்ணில் இருக்கும் தனது தந்தை மகிழ்ந்திருப்பார் எனவும் கூறினார்.