சென்னை:
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தொடர் முயற்சிகளின் விளைவாக மருத்துவப் படிப்புகளில் OBC பிரிவினருக்கான 27% இடஒதுக்கீட்டை இந்த ஆண்டே அமல்படுத்துவதாக அறிவித்துள்ளது ஒன்றிய அரசு.

2019ஆம் ஆண்டு இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான இட ஒதுக்கீடு குறித்து மாநிலங்களவையில் தி.மு.க எம்.பி பி.வில்சன் பேசினார். பின்னர், OBC இட ஒதுக்கீடு குறித்து விவாதிக்க தி.மு.க சார்பில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கப்பட்டது.

மருத்துவப் படிப்புகளில் இட ஒதுக்கீடு குறித்து மோடி அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என தி,மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். மருத்துவப் படிப்பில் ஓ.பி.சி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு தொடர்பாக ஒன்றிய அரசு சட்டம் இயற்ற அழுத்தம் தரக்கோரி, சோனியா காந்தி உள்ளிட்ட 13 தலைவர்களை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். தொடர்ந்து, திருச்சி சிவா, பி.வில்சன் உள்ளிட்ட தி.மு.க எம்பிக்கள் OBC இட ஒதுக்கீடு குறித்து மாநிலங்களவையில் பேசினர்.  தி.மு.கவின் பலகட்ட கோரிக்கைகளுக்கும் ஒன்றிய மோடி அரசு சரியான பதிலளிக்காத நிலையில் மருத்துவப் படிப்புகளில் சமூக நீதி பின்பற்றப்படவில்லை என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார்.

இதையடுத்து, இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை நாடியது தி.மு.க. தி.மு.க வழக்கறிஞர் பி.வில்சன் உச்சநீதிமன்றத்தில் தனது வாதத்தை எடுத்துவைத்தார். இந்த வழக்கில், உயர்நீதிமன்றத்தை நாடுமாறு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது தி.மு.க. இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையில் 50 சதவீத இட ஒதுக்கீட்டை இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்களுக்கு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் ஒன்றிய, மாநில அரசுகள் மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில் பிரதிநிதிகள் அடங்கிய குழு அமைத்து இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து முடிவெடுக்கவேண்டும் என அறிவுறுத்தியது.

அதேநேரத்தில் இந்த இட ஒதுக்கீட்டை நடப்பு கல்வி ஆண்டிலேயே அமல்படுத்தக்கோரி தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது, அதுதொடர்பான விசாரணையின்போது, ஓ.பி.சி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் இந்த ஆண்டே இடஒதுக்கீடு வழங்குவதற்கான எந்த சாத்தியக்கூறுகளும் இல்லை என ஒன்றிய அரசு பதில் மனு அளித்தது.இதனால் உயர்நீதிமன்றத்தில் தி.மு.க சார்பில் ஒன்றிய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஒன்றிய அரசு பதிலளிக்க 2 வார காலம் அவகாசம் வழங்கினர்.

இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. அப்போது அவர் ஓ.பி.சி இட ஒதுக்கீட்டை இந்தாண்டே வழங்க முடிவு செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு திட்டத்தில் ஓ.பி.சி-க்கு 27% இட ஒதுக்கீடு வழங்க முடிவு எடுத்துள்ளதாகவும், இந்த கல்வி ஆண்டு முதல் இது நடைமுறைக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான இட ஒதுக்கீடு விவகாரத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட தொடர் முயற்சிகளின் விளைவாகவே ஒன்றிய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஒன்றிய அரசின் இந்த அறிவிப்பு சமூக நீதி நோக்கிய பயணத்தில் முக்கியமான நகர்வாகப் பார்க்கப்படுகிறது. இத்தகைய அறிவிப்பைப் பெற்றுத்தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், தி.மு.கவுக்கும் பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.