2022 ம் ஆண்டு மத்திய அரசு பட்ஜெட் குறித்து விவாதிக்க மாநில அரசுகளின் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது, இந்த கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
செஸ் மற்றும் இதர வரிகள் கடந்த 10 ஆண்டுகளில் (2010 – 11ல் 6.26 சதவீதம் இருந்து 2020-21 ல் 19.9 சதவீதம்) மூன்று மடங்கு அதிகரித்துள்ள போதும் இந்த வரி மொத்தமும் மாநில அரசுடன் பகிரப்படாமல் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதால் மாநிலங்களுக்கு 20 சதவீதம் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது.
மாநில சுயாட்சியின் முக்கியத்துவத்தை உணர்ந்து நிதி ஆதாரங்களை மத்திய மற்றும் மாநில அரசுகள் பகிர்ந்து கொள்வதையும் மாநிலங்களுக்கு சில வரிவிதிப்பு அதிகாரத்தையும் நமது அரசியலமைப்புச் சட்டம் உறுதிப்படுத்தியுள்ளது.
இருந்தபோதும், செஸ் மற்றும் இதர வரிகள் மூலம் கிடைக்கும் வருவாய் மாநிலங்களுடன் பகிரப்படாமல் இருப்பதால் 2021-22 நிதியாண்டில் மட்டும் மாநிலங்களுக்கு சுமார் 1.5 லட்சம் கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளது.
சமநிலையில்லாமல் மத்திய அரசிடம் இவ்வாறு குவிக்கப்படும் அதிகாரம் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள உண்மையான நிதி கூட்டாட்சி முறைக்கு எதிரானது என்று மத்திய அரசுக்கு நேற்று எழுதியுள்ள கடிதத்தில் தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எழுதியுள்ள இந்த கடிதத்தில் அவர் மேலும் கூறியிருப்பதாவது :
மத்திய அரசின் மொத்த வரி வருவாயில் மறைமுக வரிகள் மூலம் கிடைக்கும் வருவாய் 2020 – 21 ல் நேரடி வரி வருவாயை மிஞ்சியுள்ளது. சமசீரற்ற மிகவும் பிற்போக்குத் தனமான இந்த மறைமுக வரிகள் மூலம் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். நேரடி மற்றும் மறைமுக வரிகளுக்கு இடையே 60 க்கு 40 என்ற விகிதாசாரம் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.
#TamilNadu FM P T R Palaivel Thiaga Rajan nudges Centre to merge cess & surcharge into basic rates of tax to ensure states receive their “legitimate share in devolution” and to extend period of #GST compensation by at least two years beyond June 2022. Full speech@DeccanHerald pic.twitter.com/hyuXZ5BY69
— Sivapriyan E.T.B | சிவப்பிரியன் ஏ.தி.ப (@sivaetb) December 30, 2021
தமிழகத்தில் தொழில் வளர்ச்சிக்கு உதவ, குறைந்த வட்டியில் கடன் வழங்கும் மத்திய முதலீட்டு நிறுவனங்கள் மாநில அரசின் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் உள்ளிட்ட முதலீட்டு நிறுவனங்களுக்கு கடன் வழங்க முன்வரவேண்டும்.
குறைந்த வட்டியில் பணம் வழங்கும் இந்த மத்திய அரசு நிறுவனங்கள் கடந்த சில ஆண்டுகளாக தொழில்முனைவோருக்கு கடன் வழங்கும் தமிழக நிறுவனங்களுக்கு நிதி வழங்குவதில்லை, தொழில் வளர்ச்சி மேம்பட உடனடியாக நிதி வழங்க உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.
மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் திட்டங்களுக்காக கடந்த காலங்களில் தமிழக அரசு சலுகை விலையிலோ அல்லது இலவசமாகவோ நிலங்களை வழங்கியது. தனியார்மயமாக்கலின் போது விற்கப்பட்ட இந்த நிலங்களுக்கான தற்போதைய சந்தை மதிப்பு விலையை நியாயமான இழப்பீடாக மாநில அரசுக்கு வழங்க வேண்டும் அல்லது அந்த மதிப்பிற்கு இணையான பங்குகளை புதிய நிறுவனங்களில் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.
வெளிநாட்டு நிதி மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் ஆண்டொன்றுக்கு ஒரு மாநிலத்திற்கு ஒரு திட்டத்திற்கு மட்டுமே அனுமதி என்று மத்திய நிதி அமைச்சகம் தற்போது விதித்துள்ள கட்டுப்பாட்டை நீக்க வேண்டும்.
வெளிநாட்டு நிதி உதவித் திட்டங்களை பெறுவதிலும் அதனை திறம்பட செயல்படுத்துவதிலும் தமிழ்நாடு நம்பகமான மாநிலமாக உள்ளது. இத்தகைய கட்டுப்பாடுகள் மூலம் தமிழ்நாட்டில் புதிய திட்டங்களை செயல்படுத்த தேவையான நிதி கிடைக்காமல் போவதோடு திறன் மற்றும் செயல்படுத்தும் தன்மையைப் பொறுத்து மற்ற மாநிலங்களுக்கு கிடைக்கப்பெறும் நிதி மிகவும் குறைவாகவே இருக்கும் என்பதால் இந்தியாவுக்கான மொத்த வெளிநாட்டு நிதி உதவியில் கணிசமான பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் இந்த கட்டுப்பாட்டை நீக்கி சிறப்பாக செயல்படும் மாநிலங்களின் வளர்ச்சியை மத்திய அரசு மேலும் ஊக்கப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
அதேபோல், தமிழ் நாட்டில் கிடப்பில் போடப்பட்டுள்ள ரயில்வே திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு வழங்கவேண்டிய நிதியை வரும் நிதியாண்டில் ஒதுக்கீடு செய்யவேண்டும் என்றும் மேலும் பல புதிய ரயில்வே திட்ட பணிகளை வரும் பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும் என்றும் மத்திய நிதி அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கேட்டுக்கொண்டுள்ளார்.