நெல்லை: ஆதிச்சநல்லூரில் ஐந்து இடங்களில் அகழாய்வு செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன் அடிப்படையில் அடுத்த ஆண்டு ஜனவரியில் அகழாய்வு பணிகள் தொடங்கவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

கடந்த 2020ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று  அறிவித்திருந்தார். இதையடுத்து அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கிடையில் கடந்த 2021 அக்டோபர் மாதம் முதல் நடைபெற்று வரும் அகழ்வராய்ச்சியில், 100 க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள், இரும்பு பொருட்கள், தங்க நெற்றி பட்டயம், சங்க கால வாழ்விடம் பகுதிகள், வெண்கலத்தால் ஆன நாய் உருவம், மான், ஆடு, நீர்கோழி, மீன் பிடிக்க பயன்படும் மீன் தூண்டில் முள், மரத்தால் ஆன கைப்பிடி கொண்ட கத்தி, இரும்பு வாள் என ஏராளமான பொருட்கள் கிடைத்துள்ளது. இந்த பணிகள்கடந்த செப்டம்பர் மாதம் (2022)  இறுதியில் நிறைவு பெற்றது.

இந்த நிலையில் தற்போது ஆதிச்சநல்லூரில் வாழ்ந்த ஆதிமனிதனின் வாழ்விடப்பகுதிகளை கண்டறிய ஐந்து இடங்களில் அகழாய்வு செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டம் கால்வாய், கருங்குளம், கொங்கராயகுறிச்சி, அகரம், திருக்கோளூர் ஆகிய ஐந்து இடங்களில் மத்திய தொல்லியல் துறை ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த பணிகள் ஜனவரி மாதத்தில் தொடங்க உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.