சென்னை: 2015 ஜனவரி.9ம் தேதிக்கு முன்பு இந்தியாவுக்குள் நுழைந்த இலங்கை அகதிகள் குடியுரிமை பெறலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
அதுபோல, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த ஆறு சிறுபான்மை சமூகங்களின் ஆவணமற்ற உறுப்பினர்களுக்கு தண்டனை விதிகளிலிருந்தும், டிசம்பர் 31, 2024 க்கு முன் இந்தியாவிற்குள் நுழைந்தால் நாடுகடத்தப்படுவதிலிருந்தும் மையம் விலக்கு அளித்துள்ளது.

நாடு முழுவதும் புதிய குடியேற்ற சட்டம் அமலுக்கு வந்துள்ளது. 1-9-2025 அன்று, உள்துறை அமைச்சகம், பாஸ்போர்ட் (இந்தியாவிற்குள் நுழைதல்) விதிகள், 1950, வெளிநாட்டினரின் பதிவு விதிகள், 1992 மற்றும் குடியேற்ற (கேரியர்களின் பொறுப்பு) விதிகள், 2007 ஆகியவற்றை மாற்றியமைத்து, குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் விதிகள், 2025 ஐ அறிவித்தது. இந்த விதிகள் 1-9-2025 அன்று அமலுக்கு வந்தன. இந்த சட்டத்தின்படி, போலியான விசா மூலம் இந்தியாவில் வசிப்பது தெரிய வந்தால், அவர்களுக்கு அபராதத்துடன் குறைந்த பட்சம் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். மேலும் 2015க்கு முன்பாக இந்தியாவிற்கு அகதிகளாக வந்தவர்கள் குடியுரிமை பெறவும் வசதி செய்துள்ளது.
இந்த நிலையில், 2015 ஜனவரி.9ம் தேதிக்கு முன்பு இந்தியாவுக்குள் நுழைந்த இலங்கை தமிழர்கள் இந்தியாவில் சட்டப்பூர்வமாக தங்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இலங்கையில் நடந்த உள்நாட்டு போர் காரணமாகவும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாகவும் இலங்கை தமிழர்கள் பலர் உலக நாடுகளில் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர் பல்வேறு நாடுகள் அவர்களுக்கு குடியுரிமையும் வழங்கியுள்ளது. இந்தியாவில் தமிழ் நாட்டிலும் பல முகாம்களில் இலங்கை தமிழர்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு குடியுரிமை வழங்கவேண்டும் என்று தமிழகத்தில் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகமானது, 2015 ஜன.9ம் தேதிக்கு முன்பு உரிய ஆவணங்கள் இன்றி இந்தியாவுக்குள் நுழைந்து, அரசிடம் அகதிகளாக பதிவு செய்த இலங்கைத் தமிழர்கள், சட்டப் பூர்வமாக தங்குவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது..
முறையான பாஸ்போர், பயண ஆவனங்கள் அல்லது விசா இருப்பினும் குற்றவியல் நடவடிக்கைகளில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதுடன், மேலும் சமீபத்தில் அமல்படுத்தப்பட்ட குடிவரவு மற்றும் வெளிநாட்டினர் சட்டத்தின் கீழ் உள்ள தண்டனை விதிகளில் இருந்தும் இலங்கைத் தமிழர்களுக்கு மத்திய அரசு விலக்கு அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.