அம்பத்தூர் கள்ளிகுப்பத்தில் ஆனந்தா கருணா வித்யாலயம் என்ற சிறப்பு குழந்தைகள் காப்பக திறப்பு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று சென்னை வந்தார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட நிதி அமைச்சர் மாலையில் மைலாப்பூர் மாட வீதியில் உள்ள காய்கறி கடைக்குச் சென்று காய்கறிகள் வாங்கினார்.

இதுகுறித்து நிர்மலா சீதாராமன் அலுவலக சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “மைலாப்பூர் மார்க்கெட்டில் நிதி அமைச்சர் காய்கறி வாங்கியதோடு அங்கிருந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடையே சிறிது நேரம் உரையாடினார்” என்று குறிப்பிட்டுள்ளது.

தண்டு கீரை கிடைக்குமா என்று பார்க்கப்போவதாக நிர்மலா சீதாராமன் கூறியதாக அவருடன் சென்ற வானதி ஸ்ரீநிவாசன் கூறினார்.

ஆனால், தண்டுக்கீரை கிடைக்காததை அடுத்து, மனத்தக்காளி கீரை, முளைக்கீரை, பிடிகருணை மற்றும் சுண்டக்காய் ஆகியவற்றை வாங்கிச் சென்றார்.

நிதி அமைச்சரின் அலுவலக வலைதளத்தில் பதிவிட்டுள்ள 1 நிமிடம் 30 வினாடி ஓடக்கூடிய வீடியோவில் கடைக்கு வந்தவர்களுடன் நிர்மலா சீதாராமன் யதார்த்தமாக பேசிய காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள் காய்கறி கடைமுன்பு வந்து இறங்கியதும் பதற்றமடைந்த பெண் வியாபாரியிடம் நிதி அமைச்சர் வருகை குறித்து தெரிவிக்கப்பட்ட பின் சகஜ நிலைக்கு திரும்பினார்.

பின்னர், நிர்மலா சீதாராமனிடம் காபி சாப்பிட அழைத்த அந்த பெண்மணியிடம் 20 நிமிடத்தில் விமான நிலையத்தில் இருக்க வேண்டும் என்று கூறி டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார்.