டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஒன்றிய அமைச்சரவைக் கூட்டம் இன்று (ஜுன்.9) நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2வது அலை கடுமையான தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், அடுத்த சில மாதங்களில் 3வது அலையும் தாக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணியை மத்திய, மாநில அரசுகள் தீவிரப்படுத்தி வருகின்றன. அதற்காக தடுப்பூசிகளும் ஆர்டர் செய்யப்பட்டு உள்ளன.

இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு காணொலி காட்சி மூலம் கூடுகிறது. அப்போது, பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த மாநிலங்களுக்கு இலவச தடுப்பூசி, தீபாவளி வரையில் ரேஷனில் உணவு தானியங்கள் இலவசம் உள்ளிட்ட அறிவிப்புகளை செயல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.மேலும், மூன்றாவது அலையில் சிக்காமல் இருக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றியும் ஆலோசனை நடைபெறும் எனத் தெரிகிறது.