டெல்லி: இன்று மாலை மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து முக்கிய அமைச்சர்கள் 5 பேர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ள நிலையில், புதிய அமைச்சர்களாக பதவி ஏற்கப்போவது யார் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகனுக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதே வேளையில் ஓபிஎஸ், தனது மகனுக்கு அமைச்சர் பதவி கேட்டு வலியுறுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற மோடி தலைமையிலான பாஜக கூட்டணி 2வது முறையாக ஆட்சி அமைத்தது. அதைத்தொடர்ந்து, அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படாமல் இருந்து வந்தது. பாஜக கூட்டணியில் இருந்து, சில கூட்டணி கட்சிகள் விலகியதாலும், அமைச்சர்கள் காலமானதாலும் சில இடங்கள் காலியாக இருந்து வந்தன. கொரோனா தொற்று பரவல் காரணமாக, புதிய அமைச்சர்கள் நியமிப்பதில் தாமதம் ஏற்பட்டு வந்தது.
இந்தநிலையில், இன்று அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. கூட்டணி கட்சிகளுக்கு வாய்ப்பு கொடுக்கும் வகையில், 43 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்க உள்ளதாக கூறப்படுகிறது. இன்று மாலை 6 மணி அளவில் குடியரசு தலைவர் மாளிகையில் பதவி ஏற்பு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
புதியதாக பதவி ஏற்கவுள்ள அமைச்சர்களில் 12 பேர் பட்டியல் வகுப்பினர், 8 பேர் பழங்குடியினர், ஓபிசி பிரிவிலிருந்து 27 பேருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளதாகவும், அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறும் உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு அமைச்சரவையில் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழ்நாட்டில், பாஜக கூட்டணி கட்சியான அதிமுக தரப்பில், ஓபிஎஸ் மகனுக்கு அமைச்சர் பதவி கேட்டு வருவதாகவும், மாநில பாஜக தலைவர் எல்.முருகனுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.