டெல்லி: பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், பிரதம மந்திரி இ-பஸ் சேவை, பாரம்பரிய தொழில்களை ஊக்குவிக்க விஸ்வகர்மா திட்டம், 2,339 கி.மீ. தூரத்திற்கான ரயில்வே வழித்தடங்கள், டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் விரிவாக்கம் உள்பட பல திட்டங்களுக்கு மத்தியஅமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்ட உள்ளது.
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்,
“மாநகரப் பேருந்து சேவைகளை மேம்படுத்தும் “பிரதம மந்திரி இ-பஸ் சேவை திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.57,613 கோடி செலவிடப்படும். நாடு முழுவதும் சுமார் 10,000 புதிய மின்சார பேருந்துகள் இயக்கப்படும். இத்திட்டம் 3 லட்சம் மற்றும் அதற்கு மேற்பட்ட மக்கள்தொகை கொண்ட நகரங்கள், பேருந்து சேவைகள் இல்லாத நகரங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிவித்தார். மத்திய அரசின் மின்சார பஸ் திட்டத்தால் 45 ஆயிரம் பேர் இருந்து 55 ஆயிரம் பேர் வரை வேலை வாய்ப்புகள் பெறுவார்கள்” எனக் கூறினார்.
பிரதமரின் விஸ்வகர்மா என்ற புதிய திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது இது கிராமப்புற மற்றும் நகர்ப்புற இந்தியாவின் பாரம்பரிய கைவினைஞர்கள் மற்றும் கைவினைத் தொழிலார்களை ஆதரிக்கும் திட்டமாகும் இத்திட்டத்திற்கு ரூ. 13,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது; முதலில் 18 பாரம்பரிய தொழில்கள் இத்திட்டத்தின் கீழ் கொண்டுவரப்படவுள்ளன
இதற்கு பிரதமர் தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் வழங்கி உள்ளது. , 2023-24 நிதியாண்டு முதல் 2027-28 நிதியாண்டு வரை ஐந்து ஆண்டுகளுக்கு ரூ.13,000 கோடி நிதி ஒதுக்கீட்டில் மத்திய அரசின் புதிய திட்டமான “பிரதமரின் விஸ்வகர்மா” திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
கைவினைஞர்கள் மற்றும் கைவினைத் தொழிலாளர்கள் தங்கள் கைகள் மற்றும் கருவிகளுடன் பணிபுரியும் பாரம்பரிய திறன்களின் குரு-சிஷ்ய பரம்பரை அல்லது குடும்ப அடிப்படையிலான பயிற்சியை வலுப்படுத்துவதும், வளர்ப்பதையும் இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. கைவினைஞர்கள் மற்றும் கைவினைத் தொழிலாளர்களின் தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதையும், விஸ்வகர்மாக்கள் உள்நாட்டு மற்றும் உலகளாவிய மதிப்புத் தொடர்களுடன் ஒருங்கிணைக்கப்படுவதை உறுதி செய்வதும் இந்தத் திட்டத்தின் இதர நோக்கங்களாகும்.
பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தின் கீழ், கைவினைஞர்கள் மற்றும் கைவினைத் தொழிலாளர்களுக்கு பிரதமர் விஸ்வகர்மா சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை, ரூ.1 லட்சம் (முதல் தவணை) வரை வட்டியில்லாக் கடன் உதவி மற்றும் ரூ.2 லட்சம் (இரண்டாம் தவணை) 5% சலுகை வட்டி விகிதத்துடன் கடன் வழங்கப்படும். மேலும் இத்திட்டம் திறன் மேம்பாடு, கருவிகளுக்கு ஊக்கத்தொகை, டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கான ஊக்கத்தொகை மற்றும் சந்தைப்படுத்தல் ஆதரவையும் வழங்கும்.
இந்த திட்டம் இந்தியா முழுவதும் உள்ள கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள கைவினைஞர்கள் மற்றும் கைவினைத் தொழிலாளர்களுக்கு ஆதரவை வழங்கும். முதலில் பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தின் கீழ் பின்வரும் பதினெட்டு பாரம்பரிய தொழில்கள் முதலில் இடம்பெறும். (i) தச்சர் (சுதார்); (ii) படகு தயாரிப்பாளர்; (iii) கவசம் தயாரிப்பவர்; (iv) கொல்லர் (லோஹர்); (v) சுத்தியல் மற்றும் கருவிகள் தயாரிப்பவர்; (vi) பூட்டு தயாரிப்பவர்; (vii) பொற்கொல்லர் (சோனார்); (viii) குயவர் (கும்ஹார்); (9) சிற்பி (மூர்த்திகர், கல் தச்சர்), கல் உடைப்பவர்; (x) காலணி தைப்பவர் (சார்மர்)/ காலணி தொழிலாளி/ காலணிக் கைவினைஞர்; (xi) கொத்தனார் (ராஜமிஸ்திரி); (xii) கூடை / பாய் / துடைப்பம் தயாரிப்பவர் / கயிறு நெசவாளர்; (xiii) பொம்மை தயாரிப்பவர் (பாரம்பரியம்); (xiv) முடி திருத்தும் தொழிலாளர் (நயி); (xv) பூமாலை தொடுப்பவர் (பூக்காரர்); (xvi) சலவைத் தொழிலாளி (டோபி); (xvii) தையல்காரர் (டார்ஸி); மற்றும் (xviii) மீன்பிடி வலை தயாரிப்பவர்.
இந்திய ரயில்வேயில் சுமார் 32,500 கோடி ரூபாய் செலவில் மொத்தம் 2,339 கி.மீ. தூரத்திற்கான 7 பல வழித்தட திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
இந்திய ரயில்வேயில் 100 சதவீத மத்திய அரசு நிதியுதவியுடன் சுமார் 32,500 கோடி ரூபாய் செலவில் மொத்தம் 2,339 கி.மீ. தூரத்திற்கான 7 பல வழித்தட திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டங்களால் போக்குவரத்து எளிதாவதுடன் நெரிசல் குறையும், இந்திய ரயில்வேயின் பரபரப்பான பிரிவுகளில் தேவைப்படும் அடிப்படை கட்டமைப்பு மேம்பாட்டினை இத்திட்டங்கள் வழங்கும்.
உத்தரப்பிரதேசம், பீகார், தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், ஒடிசா, ஜார்கண்ட், மேற்குவங்கம் என 9 மாநிலங்களில் உள்ள 35 மாவட்டங்களை உள்ளடக்கிய இந்த திட்டங்களால் இந்திய ரயில்வேயில் தற்போதுள்ள ரயில் பாதை கட்டமைப்பில் 2339 கி.மீ. தூரத்தை அதிகரிக்கும். இம்மாநிலங்களில் உள்ள மக்களுக்கு 7.06 கோடி மனித நாட்கள் வேலைவாய்ப்பையும் வழங்கும்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் விரிவாக்கத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. டிஜிட்டல் இந்தியா திட்டம் குடிமக்களுக்கு டிஜிட்டல் சேவைகளை வழங்குவதற்காக ஜூலை 1, 2015 அன்று தொடங்கப்பட்டது. இது மிகவும் வெற்றிகரமான திட்டமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் இந்தியா திட்டர்ததின் விரிவாக்கத்திற்கு மொத்த செலவு ₹14,903 கோடி. இது பின்வருவனவற்றைச் செயல்படுத்தும்: FutureSkills Prime திட்டத்தின் கீழ் 6.25 லட்சம் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் மறு-திறன் மற்றும் திறன்மிக்கவர்களாக மாற்றப்படுவார்கள்; தகவல் பாதுகாப்பு மற்றும் கல்வி விழிப்புணர்வு கட்டம் (ISEA) திட்டத்தின் கீழ் 2.65 லட்சம் நபர்கள் தகவல் பாதுகாப்பில் பயிற்சி பெறுவார்கள்; புதிய வயது ஆளுமைக்கான (UMANG) ஆப்/பிளாட்ஃபார்மிற்கான ஒருங்கிணைந்த மொபைல் பயன்பாட்டின் கீழ் 540 கூடுதல் சேவைகள் கிடைக்கும். தற்போது 1,700 க்கும் மேற்பட்ட சேவைகள் UMANG இல் ஏற்கனவே கிடைக்கின்றன;
தேசிய சூப்பர் கம்ப்யூட்டர் திட்டத்தின் கீழ் மேலும் 9 சூப்பர் கம்ப்யூட்டர்கள் சேர்க்கப்படும். இது ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட 18 சூப்பர் கம்ப்யூட்டர்களுடன் கூடுதலாகும்; பாஷினி, AI-இயக்கப்பட்ட பல மொழி மொழிபெயர்ப்புக் கருவி (தற்போது 10 மொழிகளில் கிடைக்கிறது) அனைத்து 22 அட்டவணை 8 மொழிகளிலும் வெளியிடப்படும்; 1,787 கல்வி நிறுவனங்களை இணைக்கும் தேசிய அறிவு வலையமைப்பின் (NKN) நவீனமயமாக்கல்; DigiLocker இன் கீழ் டிஜிட்டல் ஆவணச் சரிபார்ப்பு வசதி இப்போது MSMEகள் மற்றும் பிற நிறுவனங்களுக்குக் கிடைக்கும்; அடுக்கு 2/3 நகரங்களில் 1,200 ஸ்டார்ட்அப்கள் ஆதரிக்கப்படும்;
3 சுகாதாரம், விவசாயம் மற்றும் நிலையான நகரங்களில் செயற்கை நுண்ணறிவுக்கான சிறப்பு மையங்கள் அமைக்கப்படும்; 12 கோடி கல்லூரி மாணவர்களுக்கு சைபர் விழிப்புணர்வு படிப்புகள்; தேசிய சைபர் ஒருங்கிணைப்பு மையத்துடன் 200க்கும் மேற்பட்ட தளங்களை மேம்படுத்துதல் மற்றும் இணைய பாதுகாப்பு துறையில் புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு ஊக்கமளிக்கும், சேவைகளுக்கான டிஜிட்டல் அணுகலை ஊக்குவிக்கும் மற்றும் இந்தியாவின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணு சுற்றுச்சூழல் அமைப்பை ஆதரிக்கும்.
இவைகள் உள்பட மேலும் பல திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.