டெல்லி: இந்தியாவில் முதன்முறையாக டிஜிட்டல் முறையில் பொதுபட்ஜெட்டை   தாக்கல் செய்த நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், சுமார் 1மணி 50 நிமிடம் பட்ஜெட் உரையை வாசித்தார்.

முன்னெப்போதும் இல்லாத சூழலில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறேன் என்றவர், பொதுமுடக்கத்தால் இந்திய பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால், பொதுமுடக்கம் அறிவிக்காவிட்டால், பெரும் சேதங்களை சந்தித்திருக்கும் என்றவர், எல்ஐசி உள்பட பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கப்பபோவதாக அறிவித்து உள்ளார்.

அதுபோல வருமான வரிச்சலுகை வழங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,  பட்ஜெட்டில் 75வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வருமான வரி தாக்கல் செய்ய வேண்டாம் என அறிவித்து உள்ளார்.

இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதைத் தொடர்ந்து, முன்னதாக குடியரசுத் தலைவர் ராம்நாத கோவிந்தை சந்தித்து ஆலோசனை நடத்தியவர், பின்னர் நாடாளுமன்றம் வருகை தந்தார்.

சரியாக காலை 11 மணிக்கு பட்ஜெட்டை வாசிக்கத் தொடங்கினார். இடையிடையே, அவருக்கு அறிவிப்புக்கு ஆளுங்கட்சியினர் மேஜையை தட்டி ஆரவாரம் செய்த நிலையில்,  விவசாயம் தொடர்பான அறிவிப்புகள் வெளியிடும்போது, எதிர்க்கட்சியினர் கூச்சலிட்டனர். ஆனால், அதை கண்டுகொள்ளாமல், பட்ஜெட்டை வாசித்தவர், திருக்குறளை மேற்கோள் காட்டி, அதுபோல மோடி அரசு செயல்படுவதாகவும் பெருமைப்பட்டுக்கொண்டார்.

நிர்மலாவின் இன்றைய பட்ஜெட் உரை காலை 11 மணிக்கு தொடங்கிய நிலையில், சரியாக 12,50 மணிக்கு நிறைவடைந்தது.  சுமார் 1 மணி நேரம் 50 நிமிடம் அவர் பட்ஜெட் உரையை வாசித்துள்ளார்.

இந்த பட்ஜெட் அவர் தாக்கல் செய்யும் 3வது பட்ஜெட் என்பது குறிப்பிடத்தக்கது.