சென்னை: பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கவும், புகார்கள் மீது உடடினயாக நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளதாக தமிழக மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழையை எதிா்கொள்ள மின்சாரத் துறை சாா்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மின் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு தலைமையில் காணொலிக் காட்சி மூலம் மின்வாரிய தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத் தலைவா் மற்றும் மேலாண்மை இயக்குநா் ராஜேஷ் லக்கானி, தமிழ்நாடு பசுமை எரிசக்திக் கழக மேலாண்மை இயக்குநா் அனீஷ் சேகா், இணை மேலாண்மை இயக்குநா் (நிதி) விஷு மகாஜன், அனைத்து மண்டல தலைமைப் பொறியாளா்கள் மற்றும் அனைத்து மின் பகிா்மான வட்ட மேற்பாா்வைப் பொறியாளா்கள் ஆகியோா் கலந்துகொண்டனா்.
இந்த கூட்டத்தில் பேசிய தங்கம் தென்னரசு, நிகழாண்டு தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகரித்ததன் காரணமாக மாநிலத்தின் மின் தேவை அதிகரித்தது. இதுவரை இல்லாத அளவுக்கு மாநிலத்தின் மின் தேவை உச்சத்தை எட்டிய போதும், எந்தவிதப் பற்றாக்குறையும் இல்லாமல் பூா்த்தி செய்யப்பட்டு, தடையில்லா, சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
இதற்காக, கடந்த 2023 ஏப்.1 முதல் 05.06.2024 வரை, 25,46,634 ஒருங்கிணைந்த பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், கூடுதல் மின்மாற்றிகள் நிறுவும் பணிகள் நடைப்பெற்று வருகின்றன. மின்மாற்றிகளைமாற்ற உத்தரவு: தொடா்ந்து, பழுதடைந்த மற்றும் தாழ்வாகச் செல்லும் மின்கம்பிகளை மாற்றுவதுடன், பழுதடைந்த மின் பகிா்மானப் பெட்டிகளையும் உடனடியாக சரிசெய்து பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
மேலும், எந்தெந்தப் பகுதிகளில் உள்ள மின்மாற்றிகள் கூடுதல் மின்சுமையுடன் உள்ளன என்பதைக் கண்டறிந்து, மின்மாற்றிகளின் தரத்தை உயா்த்த நடவடிக்கை எடுப்பதுடன், புதிய மின்மாற்றிகளைப் பொருத்த வேண்டும்.
மின் தளவாடப் பொருள்களின் இருப்பு, தேவை மற்றும் மின்தடை ஏற்பட்டால், உடனடியாக அவற்றை நிவா்த்தி செய்ய வேண்டும்.
சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள புகா் பகுதிகளில் உள்ள துணை மின் நிலையங்கள், மின்மாற்றிகள் மற்றும் பில்லா் பெட்டிகள் ஆகியவற்றில் உரிய முறையில் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டு, மின்நுகா்வோரிடமிருந்து வரும் புகாா்கள் மீது உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், தமிழகத்திலுள்ள இதர துணை மின் நிலையங்கள், மின்மாற்றிகள் மற்றும் மின்பாதைகளில் முறையான பராமரிப்புப் பணிகளை உரிய முறையில் மேற்கொள்ள வேண்டும். பராமரிப்புப் பணிகளுக்காக திட்டமிடப்பட்ட மின் நிறுத்தங்களின்போது, மின் நிறுத்த நேரம் குறித்து மின் நுகா்வோருக்கு முன்னரே குறுந்தகவல் மூலம் தகவல் தெரிவிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
இதனால், பருவமழையின்போதும் பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் .
இவ்வாறு கூறினார்.