சென்னை: கோடையில் தடையில்லா மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மின்சாரத்துறை அமைச்சர் அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டியளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில், இப்போதே வெயில் கொளுத்தி வருகிறது. இதனால், பகல் நேரங்களில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவே தயங்குகின்றனர். இதற்கிடையில், கோடையை சமாளிக்க பலர் ஏசி போன்ற குளிருட்டும் சாதனங்களையும் வாங்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், நுகர்வோர் மின்தேவை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
இந்த நிலையில், சென்னை அண்ணாசாலையிலுள்ள தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் எதிர்வரும் கோடை காலத்தில் தமிழ்நாடு முழுவதும் சீரான மின் விநியோகம் வழங்குதல் தொடர்பாக அனைத்து மண்டல தலைமை பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வை பொறியாளர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, “கோடைக்காலத்தை எதிர்கொள்ள ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. 22,000 மெகா வாட் மின்சாரம் இந்த ஆண்டு தேவைப்படும். தமிழ் நாடு முழுவதும் தடையில்லா மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், 250 துணை மின் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
50 சதவீதம் மின்சாரம் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. வரும் ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு தேவையான மின்சாரத்தை நாங்களே உருவாக்க பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகிறோம் என்றவர், மின்சார துறையில் மூன்றில் ஒரு பங்கு காலி பணியிடங்கள் உள்ளது. காலியாக உள்ள காலி பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். .
கோடை காலத்தில் 22ஆயிரம் மெகாவாட் தேவை உள்ளது. அதற்கு தயார் ஆகி வருகிறோம். 6000 மெகாவாட் டெண்டர் கோரி இருக்கிறோம். ஏப்ரல் மே மாதங்களுக்கு தேவை என்பதால் தான் 6ஆயிரம் மெகாவாட் டெண்டர் கோரப்பட்டுள்ளது. முன்பு இருந்ததை விட தேவை அதிகரித்துள்ளது என்றவர் மின்சாரம் தொடர்பாக புகார்கள் இருப்பின் உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.