மதம், இனம், ஜாதி என்று எந்த ஒரு பாகுபாடும் இல்லாமல் நாடு முழுவதும் உள்ள இந்திய குடிமக்கள் அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டம் குறித்து கடந்த சில ஆண்டுகளாக மத்திய அரசு விவாதித்து வருகிறது.

இதனைத் தொடர்ந்து 2019ம் ஆண்டு பாஜக தலைவரும் வழக்கறிஞருமான அஸ்வினி குமார் உபாத்யாய் பொது சிவில் சட்டம் உருவாக்குவதற்கான சட்ட கமிட்டியை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

 

நாட்டின் ஒருமைப்பாட்டையும், பெண்களுக்கான அங்கீகாரம், பாலின பாகுபாடற்ற சட்டம் உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய பொது சிவில் சட்டம் உருவாக்கப்படவேண்டும் என்று டெல்லி உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு தொடர்பாக பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உயர்நீதி மன்றம் அறிவுறுத்தியிருந்தது.

நாட்டில் உள்ள பல்வேறு இன, மத குழுக்களிடையே சொத்து மற்றும் திருமணம் குறித்து வேறு வேறு சட்டங்கள் நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன.

பொது சிவில் சட்டம் இந்த வேறுபாடுகளைக் களைந்து அனைவருக்கும் சமமான நீதியை வழங்குவதுடன் நாட்டின் ஒருமைப்பாட்டை வளர்க்க உதவும் என்று தனது பதில் மனுவில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அனைத்து குழுக்களுடனும் ஆலோசனை நடத்தி சட்ட கமிஷனிடம் இருந்து உரிய அனுமதி கிடைத்தவுடன் பொது சிவில் சட்ட நடைமுறைகள் தொடங்கப்படும் என்றும் இது மிகவும் உணர்ச்சிமிக்க விவகாரம் என்பதால் அரசு இதில் நிதானமாகவே செயல்பட்டு வருகிறது என்றும் அதில் கூறியுள்ளது.