சென்னை: ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம், ஊரை ஏமாற்றும் திட்டம் என்றும், தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்த நாள் முதலாகவே மக்களுக்கு எந்த நன்மையையும் செய்யாமல், விளம்பரம் மட்டுமே செய்து ஏமாற்றிக் கொண்டிருக்கிறது என்று பாமக தலைவர் அன்புமணி குற்றம் சாட்டி உள்ளார்.

இதுதொடர்பாக பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் , தமிழ்நாட்டு மக்களுக்கு அரசின் சேவைகளை வழங்குவதற்காக உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கள் வரும் 15-ந்தேதி தொடங்கி டிசம்பர் 14-ந்தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இத்திட்டத்தின் பெயரால் மக்களை அரசு ஏமாற்றுவது கண்டிக்கத்தக்கது.
இந்த திட்டத்தின் மூலம் அடுத்த 4 மாதங்களில் நான்கு கட்டங்களாக 10 ஆயிரம் முகாம்கள் நடத்தப்படவுள்ளன. அந்த முகாம்களில் நகர்ப்புற பகுதிகளில் 13 அரசுத்துறைகளைச் சார்ந்த 43 சேவைகளும், ஊரகப்பகுதிகளில் 15 துறைகளைச் சேர்ந்த 46 சேவைகளும் வழங்கப்படும்.
வழக்கமாக மக்களுக்குத் தேவைப்படும் சாதிச் சான்றிதழ்கள், பிறப்புச் சான்றிதழ்கள், இறப்புச் சான்றிதழ்கள், கலைஞர் கைவினைத் திட்டம், ஆதரவற்ற குழந்தைகளுக்கு நிதி உதவி திட்டம், முதியோர் உதவித்தொகை, பாதாள சாக்கடை இணைப்பு உள்ளிட்டவற்றுக்காகத் தான் இந்த முகாம்களில் பொதுமக்கள் விண்ணப்பிக்க முடியும். இவை வழக்கமாகக் கிடைக்கும் சேவைகள் தான்.
தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்த நாள் முதலாகவே மக்களுக்கு எந்த நன்மையையும் செய்யாமல், விளம்பரம் மட்டுமே செய்து ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. எனவே, உங்களுடன் ஸ்டாலின் என்ற பெயரில் மக்களை ஏமாற்றுவதை விடுத்து சேவை உரிமைச் சட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.