சிறப்புக்கட்டுரை: ராஜ்குமார் மாதவன்
இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை என்பது வேலைசெய்ய விருப்பமுள்ள எவரும், வேலை இல்லாமல் இருந்தால் அவர்கள் வேலையற்றவர்களாக தீர்மானிக்கப்படுவர். அதே நபர், ஒரு தினசரி கூலியாக வேலைசெய்தாலும் அவர் வேலையற்றவர்களாக கருத்தப்படமாட்டார்கள். அதன் அடிப்படையில் பார்த்தால் தமிழகத்தில், கடந்த மாத நிலவரப்படி 1% குறைவானவர்களே வேலையற்றவர்களாக இருப்பதாக தமிழக அரசு தரவுகள் தெரிவிக்கின்றன.
தமிழகம் ஆண்டுக்கு 5 லட்சம் பட்டதாரிகளையும், 2 லட்சம் பொறியாளர்களையும் தயார் செய்து வேலைவாய்ப்பு சந்தைக்கு அனுப்புகிறது. பட்டப்படிப்பு படிக்காதவர்களையும் சேர்த்தால், ஆண்டுக்கு பல லட்சம் இளைஞர்கள் வேலைதேடி சந்தைக்கு வருகின்றார்கள்.
ஆனால், தமிழகம், இதனை பெரிய வேலைவாய்ப்பு சந்தைகளை கொண்டுள்ளதா என்றால் அது கேள்விக்குறியே. ஆனால், அரசு குறியீடுகள் 1% குறைவானவர்களே வேலையில்லாமல் இருப்பதாக தெரிவிக்கிறது. இதன் உள்ளடக்கம் என்வென்றால், எண்ணற்ற தமிழக பொறியாளர்கள் மற்றும் பட்டதாரிகள், வாகன ஓட்டிகளாகவும், உணவகங்களில், உணவு விநியோக செய்யும் பணியில் இருப்பதும் வேலைவாய்ப்பாக கருதப்படுகிறது.
தமிழகத்தில் 75 % மேலான மாணவர்கள் தனியார் கல்வி நிறுவனங்களில் படிப்பை முடிக்கின்றனர். அவ்வகையில் தனியார் கல்லூரிகளில், பட்டப்படிப்பை முடிக்கும் தமிழர்கள் சராசரியாக 50,000 ரூபாயில் இருந்து 5 லட்சம் ரூபாய் வரையிலான கடன் சுமையுடன் வேலைவாய்ப்பு சந்தைக்கு வருகின்றார்கள். அவர்களின் கடன் சுமை, அவர்களை கிடைத்த வேலையில் திணிக்கிறது. அது அவர்கள் படித்த கல்வித்தகுதிக்கான வேலையா, அவர்களுக்கு அது போதுமான ஊதியத்தை உத்தரவாதம் செய்கிறதா என்றால், இல்லை என்பதே நிதர்சனமான உண்மை. அரசுகள் இந்த உண்மையை வசதியாக மறைத்தே வேலைவாய்ப்பு தொடர்பான தரவுகளை தெரிவிக்கின்றன.
அரசின் புள்ளிவிவரங்களின்படி, தமிழக வாக்காளர்கள் 6 கோடியே 23 லட்சம் ஆகும், அதில் 1 கோடியே 37 லட்சம் வாக்காளர்கள் 18 வயதில் இருந்து 30 வயதிற்குள் இருக்கும் இளம் வாக்காளர்கள்.
சராசரியாக தமிழக வாக்காளர்களின் 21 % சரியான வேலையில்லாத இளம் வாக்காளர்கள். இவர்கள் நீண்ட காலமாக தங்கள் கல்வித்தகுதிக்கான வேலையோ, உரிய ஊதியமோ இல்லை என்ற பெரிய உள்ள குமுறலுடன் இருந்து வருகிறார்கள். இந்த நிகழ்வுகள், அவர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளில், மிக வலி பொதிந்த தருணங்களாக, தடயங்களாக மாறியுள்ளது.
இந்த சூழ்நிலையில், தமிழகம் எதிர்நோக்கும் தற்போதைய (ஏப்ரல் 6, 2021) சட்டசபை தேர்தல் என்பது, தகுதியான வேலைவாய்ப்புக்கான கேள்விக்கு பதில் அளிக்குமா? இந்த கேள்விக்கு உரிய பதிலுடன் வரும் கட்சிக்கே இந்த இளம் வாக்காளர்களின் வாக்குகள் சேரும் என்பதில் எவருக்கும் ஐயம் ஏற்பட வாய்ப்பேயில்லை.
கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக அரசு, வேலைவாய்ப்புத்துறையில் போதிய கவனம் செலுத்தவில்லை என்பது பரவலான எண்ணம்.
திமுகவின் 10 லட்சம் வேலைவாய்ப்பு உருவாக்க உத்தரவாதம் என்பது இளஞர்களை வசீகரிக்கும், வாக்குகளாக மாற்றும் திட்டமாகும்.
இருந்தும், சரியான கல்வித்தகுதிக்கான வேலைவாய்ப்பாக அது அமையவேண்டும், அது மட்டுமே தமிழகத்தை வளர்ச்சி பாதையில் இட்டு செல்லும்.