சென்னை:

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் சமூகவியல் கல்வி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதால் த குதியற்ற ஆசிரியர்களை கொண்டு பாடம் நடத்தும் சூழல் நிலவுகிறது.

‘‘1990ம் ஆண்டு முதல் 2000ம் ஆண்டு வரை பணியில் சேர்ந்த ஆசிரியர்களே பெரும்பாலும் தற்போது அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பணியில் உள்ளனர். இவர்களும் முறையான பயிற்சி பெறுவதில்லை’’ என்று எஸ்பிஓஏ மெட்ரிக் பள்ளி முதல்வர் ரீட்டா ஜான் கூறினார்.

மேலும், அவர் கூறுகையில், ‘‘ பெரும்பாலானவர்கள் தொலைதொடர்பு கல்வி திட்டம் மூலம் பட்டம் பயின்றுள்ளனர். அவர்கள் தற்போதைய நவீன கால வகுப்பறைக்கு பொருத்தமற்றவர்களாக உள்ளனர். கதை சொல்லும் முறையிலான ஆசிரியர்களை பணி நியமனம் செய்வது சிரமமாக உள்ளது. அதற்கு காரணம் நமது கல்வி துறையின் தேர்வு முறை தான். இது தகுதியற்ற பட்டதாரிகளை உருவாக்கியுள்ளது. தகுதியற்ற ஆசிரியர்களும் உருவாகிவிட்டனர்’’ என்றார்.

உதாரணமாக புவியியல் வல்லுனர்கள் தற்போது சிலர் மட்டுமே உள்ளனர். காரணம் இதுபோன்ற குறிப்பிட்ட சிறப்பு பாடப்பிரிவுகளை சிலர் மட்டுமே தேர்வு செய்து படிக்கின்றனர்.

என்எஸ்என் மெட்ரிக் பள்ளி தாளாளர் சித்ரா பிரசாத் கூறுகையில், ‘‘கல்லூரிகளில் தரமான புவியியல் துறை இருப்பது அரிதாகிவிட்டது. ராணிமேரி கல்லூரி, போன்று ஒரு சில கல்லூரிகளில் மட்டுமே தரமான புவியியல் துறைகள் உள்ளது. இதில் பட்டம் பெறுபவர்கள் குறைவாக தான் உள்ளனர். இதன் மூலம் நாங்கள் எப்படி சிறந்த ஆசிரியரை தேர்வு செய்ய முடியும். சமூகவியல் பாடத்திற்கு பொருத்தமான ஆசிரியர்களை தேர்வு செய்வதில் சிரமம் உள்ளது’’ என்றார்.

தனியார் பள்ளிகள் சங்க கூட்டமைப்பு உறுப்பினர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், ‘‘ கலை பிரிவு பாடங்கள் நடத்த பட்டதாரிகளுக்கு தற்போது அதிகளவில் வேலைவாய்ப்புகள் உள்ளது. ஆனால், இது தமிழுக்கும், வரலாறு பாடத்திற்கும் இல்லை. இந்த பாடப்பிரிவுகளை பயின்றால் ஆசிரியராக மட்டுமே வாய்ப்பு கிடைக்கும். அதனால் இதை அதிகளவில் யாரும் ஆர்வம் காட்டுவதில்லை. அதனால் பெரும்பாலான ஆசிரியர்களுக்கு பாடம் குறித்த முழு அறிவு இல்லை’’ என்றார்.