சென்னை: எந்தப் பொருளுமே வாங்கப்படாமல் இருக்கும் ரேஷன் அட்டைகளை, சர்க்கரை வகை அட்டையாக மாற்றுவதற்கு உணவு வழங்கல் துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் மொத்தமிருக்கும் ரேஷன் அட்டைகளின் எண்ணிக்கை 2.06 கோடி. இவற்றில், எந்தப் பொருளும் வாங்காமல் சுமார் 50 ஆயிரம் ரேஷன் அட்டைகள் உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால், எந்தப் பொருளும் வாங்காத அட்டைதாரர்கள், தங்களின் அட்டைகளை அரிசி அல்லது சர்க்கரை அட்டைகளாக வகை மாற்றம் செய்து தருமாறு, அரசுக்கு நீண்டநாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதையடுத்து, எந்தப் பொருளும் வாங்காத அட்டைகளையும் சர்க்கரை அட்டைகளாக மாற்றம்செய்ய உணவு வழங்கல் துறை முடிவு செய்துள்ளதாகவும், இதுகுறித்த அறிவிப்பு, வரும் 19ம் தேதி கூட்டுறவு மற்றும் உணவுத்துறை மானியக் கோரிக்கையின்போது வெளியாகலாம் எனவும் கூறப்படுகிறது.