சென்னை:

‘‘நீட் தேர்வில் தமிழகத்திற்கு ஒரு வருடம் விலக்கு அளிக்கும் சட்ட மசோதாவுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்காததை ஏற்றுக் கொள்ள முடியவில்லை’’ என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை சேர்ந்த கிருத்திகா என்ற மாணவி பிளஸ் 2 தேர்வில் 1,184 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். ஆனால் அவர் நீட் தேர்வில் உரிய மதிப்பெண் பெறவில்லை. தன்னை மருத்துவ கல்வி மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங்கில் கலந்துகொள்ள அனுமதிக்க வேண்டும் என்று கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் இன்று விசாரணை நடந்தது. அப்போது நீதிபதி கிருபாகரன் கூறுகையில்,‘‘ நீட் விவகாரம் உச்சநீதிமன்ற விசாரணையில் இருப்பதால் கிருத்திகாவை கவுன்சிலிங் கலந்துகொள்வது தொடர்பான விஷயத்தில் தலையீட முடியாது.

நீட் காரணமாக மருத்துவ கல்வியில் இடம் கிடைக்காத விரக்தியில் மாணவ மாணவிகள், பெற்றோர் தற்கொலை செய்து கொள்ளும் விபரீதி முடிவை எடுக்காத வகையில் மாநில அரசு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’’ என்றார்.

மேலும், அவர் கூறுகையில், ‘‘ நீட் தேர்வு நடத்தும் பொறுப்பை மத்திய அரசு சிபிஎஸ்இ வசம் ஒப்படைத்திருப்பது சரியான முடிவு கிடையாது. பொதுவான ஒரு அமைப்பிடம் தான் இதை வழங்கி இருக்க வேண்டும். சிபிஎஸ்இ தனது தேர்வு முறை அடிப்படையில் தான் கேள்வி தாள் தயார் செய்யும். இதனால் மாநில கல்வி வாரியம் மூலம் பயின்றவர்கள் பாதிக்கப்படுவார்கள்.

கடந்த 10 ஆண்டுகளாக பள்ளி பாடத் திட்டத்தை மாற்றி அமைக்க தமிழக அரசு தவறிவிட்டது. தமிழகத்தை சேர்ந்த 9 சதவீத மாணவர்கள் மட்டுமே நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த மோசமான நிலைக்கு தமிழக அரசு தான் காரணம்’’ என்று தெரிவித்தார்.

தமிழகத்தை சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு நீட் தேர்வில் இருந்து ஓராண்டிற்கு விலக்கு அளிக்க வேண் டும் என்ற தமிழக அரசின் சட்ட மசோதாவுக்கு மத்திய அரசு கடந்த 22ம் தேதி ஒப்புதல் அளிக்க மறுத்துவிட்டது. இதனால் நீட் அடிப்படையில் 4ம் தேதி முதல் கவுன்சிலிங் தொடங்க வேண்டும் என உ ச்சநீதிமன்றம் உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.