லிஸ்பன்

ந்திய பேரசரரான அசோகர் அனைத்து மதங்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என விரும்பியதாக ஐநா துணை தலைவர் ஆமினா  முகமது கூறி உள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபை சமீபத்தில் லிஸ்பனில் ஒரு கருத்தரங்கு நடத்தியது.  உலமின் பன்முகத்தன்மை மையத்தின் சார்பில் இந்த கருத்தரங்கு நடந்தது.  இந்த கருத்தரங்கில் ஐக்கிய நாடுகள் சபையின் துணை செயலராக பதவி வகிக்கும் ஆமினா முகமது கலந்துக் கொண்டு உரையாற்றினார்.    இவர் சமூக விவகாரங்களில் தனது கருத்துக்களை தைரியமாக தெரிவிக்கும் பெண்களில் ஒருவர் ஆவார்.

ஆமினா முகமது, “பன்முகத்தன்மை மற்றும் ஒற்றுமைக்கு இடையே வெகுநாட்களாக ஒரு மறைமுக போர் இருந்து வருகிறது.  இந்த போர் ஆயிராமாயிரம் வருடங்களாக இருந்து வருகிறது.   முக்கியமாக இந்த பிரிவு என்பது மத அடிப்படையில் நடைபெறுகிறது.   நாம் நமது பன்முகத்தன்மையை காத்து ஒற்றுமையை வளர்ப்பதற்கு இன்னும் வெகுதூரம் பயணம் செய்ய வேண்டி உள்ளது.

தற்போது உலகெங்கும் தேச விரோதம், சகிப்பின்மை, பெண்கள்,  சிறுபான்மையினர், வெளிநாட்டினர் மற்றும் அகதிகள் ஆகியோருக்கு பல விதங்களிலும் கொடுமைகள் அதிகரித்துள்ளன.   அனைத்து நாடுகளிலும் அனைத்து மதங்களிலும் வெறுப்புணர்ச்சி நீடித்து வருகிறது.  அதுவே பன்முகத் தன்மை எனவும் கூறப்பட்டு வருகிறது.   இதை காரணம் காட்டி சிறுபான்மையினர் தாக்கப்படுகின்றனர்.

குறிப்பாக வழிபாட்டு தலங்களில் நடக்கும் தாக்குதல் நடவடிக்கைகள் மற்ற மதத்தின் மீதான மரியாதை குறைவை சுட்டி காட்டுகிறது.   இதற்கு தற்போது நியுஜிலாந்தில் நடந்த மசூதி தாக்குதல்களையும் இலங்கையில் நடந்த தேவாலய தாக்குதல்களையும் முக்கிய உதாரணமாக கொள்ளலாம்.    இதனால் மக்களிடையே ஒரு பாதுகாப்பின்மை உருவாகிறது.  அது சமுதாயத்துக்கு கேடு விளைவிக்கும்.

குறிப்பாக சமுதாயத்தில் பாதிக்கும் மேல் உள்ள நமது தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் மகள்களை இது பெரிதும் பாதிக்கும்.  ஒவ்வொரு மத கலவரத்திலும் அதிகம் பெண்களே பாதிப்பு அடைகின்றனர்.   இதை தவிர்க்க வேண்டும் என பல பெரியவர்கள் சொல்லி உள்ளனர்.

குறிப்பாக இந்திய நாட்டின்  பேரசரான அசோகர்  பல்லாண்டுகளுக்கு முன்பு அனைத்து மதத்தவரும் ஒருவர் மதத்தை மற்றவர் மதிக்க வேண்டும் எனவும் மத நல்லிணக்கம் வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார்.   அதை அனைவரும் மதித்து நடக்க வேண்டும்.   பேரரசர் அசோகர் ‘அசோகர் தி கிரேட்’ என புகழப்பட்டவர்.” என தன் உரையில் தெரிவித்துள்ளார்.