உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், 2வது உலகப்போரைவிட சவாலானது என்று ஐ.நா. பொதுச்செயலாளர் கவலை தெரிவித்து உள்ளார்.
சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் சுமார் 100க்கும் மேற்பட்ட உலக நாடுகளை ஆட்டிப்படைத்து வருகிறது. உலக வல்லரசான அமெரிக்கா உள்பட இத்தாலி, ஸ்பெயின்,ஈரான், பிரான்ஸ், மற்றும் இந்தியா உள்பட பல நாடுகள் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மக்களை காக்க போராடி வருகின்றன.
உலகம் முழுவதும் கொரோனாவுக்கு சுமார் 8 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், சுமார் 42 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர். அதிகபட்சமாக, அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் போன்ற ஐரோப்பிய நாடுகள் பெரும் உயிரிழப்பைச் சந்தித்துள்ளன.
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ஐ.நா. பொதுச்செயலாளர், கொரோனா வைரஸால் உலக நாடுகள் அடைந்துள்ள பாதிப்புக்கு வருத்தம் தெரிவித்தார்.
கொரோனா பரவல், உலக நாடுகளிடையே சமூக பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தும் அபாயம் ஏற்பட்டு உள்ளதாகவும், இது 2வது உலகப் போரைவிட சவாலானது என்றும் ஐ.நா. பொதுச் செயலாளர் அண்டோனியா குத்தரெஸ் கவலை தெரிவித்துள்ளார்.