புதுடெல்லி:

கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவப் பணியாளர்களுக்கான பாதுகாப்பு கவசம் அடங்கிய 90 டன் மருத்துவ உபகரணங்கள் மற்றும் பாதுகாப்பு கருவிகளை செர்பியாவுக்கு ஏற்றுமதி செய்துள்ளது இந்தியா. கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான நாடுகளுக்கு உதவிவரும் ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டத்தின் (யுஎன்டிபி) செர்பிய பிரிவு தனது ட்விட்டரில் இதனை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்திய அரசிடம் இருந்து எந்த பதிலும் தரப்படவில்லை.

“90 டன் மருத்துவ பாதுகாப்பு உபகரணங்களுடன் இந்தியாவில் இருந்து 2 வது சரக்கு விமானம் இன்று பெல்கிரேடில் தரையிறங்கியது. செர்பிய அரசு வாங்கிய மதிப்புமிக்க பொருட்களின் போக்குவரத்துக்கு ஐரோப்பிய ஒன்றியத்தால் முழுமையாக நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் யுஎன்டிபி செர்பியா இந்த விமானத்தை ஏற்பாடு செய்து, விரைவான விநியோகத்தை உறுதி செய்தது,” என்று யுஎன்டிபி தனது ட்வீடில் குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள மருத்துவ ஊழியர்களுக்கு தற்போது அவசியம் தேவைப்படுகிற 50 டன் அறுவை சிகிச்சை கையுறைகள், முகமூடிகள் மற்றும் பாலிதீன் மேலாடைகள் இந்த 90 டன்னில் அடங்கும்.

இதேபோல், கடந்த மார்ச் 29 அன்று 35 லட்சம் அறுவை சிகிச்சை கையுறைகள் அனுப்பப்பட்டதாக கொச்சி விமான நிலைய செய்தித்தொடர்பாளர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.