ஜெனிவா: 
செப்டம்பர் 21 ஆம் தேதி சர்வதேச அமைதி தினத்தில் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் அன்டோனியோ குடெரெஸ்  அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  இந்த ஆண்டு சர்வதேச அமைதி தினம் கொரோனா நெருக்கடியில் இருக்கும் நேரத்தில் வருகிறது. கொரோனா பரவலால்  4 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் உயிர் இழந்துள்ள நிலையில், செப்டம்பர் 21 ஆம் தேதி சர்வதேச அமைதி தினத்தில் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
“நமது உலகம் ஒரு முழுமையான தேர்வை எதிர்கொள்கிறது. அமைதி அல்லது நிரந்தர ஆபத்து இந்த இரண்டில் ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டியுள்ளது.  என் நண்பர்களே, நாம் அமைதியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். உடைந்த நமது உலகத்தைச் சரிசெய்ய ஒரே வழி இதுதான்,” என்றும் அவர் கூறினார்.
உலகெங்கிலும் உள்ள போராளிகள் தங்கள் ஆயுதங்களைக் கீழே வைத்து உலகளாவிய போர்நிறுத்த தினத்தை அனுசரிக்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.
மனிதக்குலத்தின் பொது எதிரிக்கு எதிராக நாம் கவனம் செலுத்த வேண்டும்: கொரோனா தொற்றை முடிவுக்குக் கொண்டுவர, உயிர்காக்கும் தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சையை அவசரமாக வழங்க, மற்றும் மீட்புகளை அனைத்து நாடுகளும் ஆதரிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.