சென்னை: மக்களை தேடி மருத்துவம் திட்டத்துக்கு ஐநா விருது வழங்கப்பட்டு உள்ளது. இதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம் அடைந்துள்ளதுடன், அமைச்சர் மற்றும் அதிகாரிகளை பாராட்டினார்.]
தமிழகத்தில் 2021இல் பொறுப்பேற்ற திமுக அரசு, தொற்றா நோய்களான நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு மக்களின் இருப்பிடங்களுக்கே சென்று சோதனை செய்து மருந்து வழங்கும் திட்டத்தை தொடங்கியது. இந்த திட்டத்தின் கீழ் பல லட்சக் கணக்கானோர் பயன்பெற்று வரும் நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் தொற்றா நோய்களுக்கான நிறுவனங்களுக்கு இடையேயான பணிக்குழு 2024ஆம் ஆண்டுக்கான விருதை மக்களை தேடி மருத்துவம் திட்டத்திற்கு அறிவித்துள்ளது.
ஐநா சபையால் மூன்று பிரிவுகளில் மொத்தம் 14 விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.இந்தியாவிற்கு மட்டும் நான்கு விருதுகள் வழங்கபட்டுள்ளன.இதில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் மூலம் சிறப்பான சேவைகளை வழங்கியதற்காக தமிழக சுகாதாரைக்கு விருது வழங்கப்பட்டுள்ளதோடு, மேலும் மூன்று நிறுவனங்களுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.
மாற்றுத் திறனாளிகள் நலன் மேம்பாட்டில் சிறப்பு கவனம் செலுத்தி வருவதற்காக மத்திய சுகாதாரத் துறையின் கீழ் இயங்கும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலுக்கு (ஐசிஎம்ஆர்), உடல் மருத்துவம் மற்றும் மறுவாழ்வுக்கான தேசிய நிறுவனம் ஆகியவற்றுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.இது தவிர திருவனந்தபுரத்தில் உள்ள CDAC எனும் மேம்பட்ட கணினி மேம்பாட்டு பழங்குடியினருக்கு டிஜிட்டல் மற்றும் செயற்கை நுண்ணறிவு மூலம் உயர்தர மருத்துவ சிகிச்சையை கொண்டு சேர்த்ததற்காகவும் விருது வழங்கப்பட்டுள்ளது.
இதை, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, திட்டத்தை சிறப்பாக முன்னெடுத்துச் சென்ற சுகாதார ஊழியர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ்தள பதிவில், இந்திய துணை கண்டத்துக்கே முன்னோடித் திட்டமாக, நமது அரசில் செயல்படுத்தப்பட்டுள்ள மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்துக்கு உலக அங்கீகாரம் தேடிவந்துள்ளது. சிறப்பான முறையில்இந்தத் திட்டத்தை செயல்படுத்தி,கண்காணித்து மேம்படுத்தி வரும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கும், அவருக்கு துணை நிற்கும் சுகாதாரத்துறை செயலாளர், மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர்மா.சுப்பிரமணியன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தொற்றா நோய்களை கட்டுப்படுத்துவதில் முதன்மையான மற்றும் சிறப்பான திட்டங்களை தீட்டி செயல்படுத்துவதற்காக, ஐநா அமைப்பின் 2024 ஆண்டுக்கான “United Nation Interagency Task Force Award” தமிழக சுகாதாரத்துறைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விருதானது, தமிழக அரசின் சுகாதாரத்துறைக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு உலக நாடுகள் அளவில் “மக்களை தேடி மருத்துவம்” திட்டத்தினை செயல்படுத்தியதற்காக கடந்த மாதம் 25-ம் தேதி அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கில் நடந்த 79-வது ஐக்கிய நாடுகள் பொது சபையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த மற்றும் விரிவான மருத்துவ சேவைகள் பயனாளிகளின் இல்லங்களில் வழங்கப்பட்டு வருகின்றன. இத்திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து கடந்த10-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் 1,80,00,844 பயனாளிகள் முதன்முறை சேவைகளையும், 3,96,66,994 நபர்கள் தொடர் சேவைகளையும் பெற்று வருகின்றனர். சர்வதேச அளவில் வழங்கப்பட்டுள்ள பெருமைமிகு இவ்விருதானது தமிழக அரசுக்கு மேன்மேலும் சிறப்புற செயல்படுவதற்கான புதிய உத்வேகத்தையும், அடுத்தகட்ட உயர்நிலையை அடைவதற்கான உந்துதலையும் அளித்துள்ளது. இவ்வாறு கூறியுள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளப்பதிவு: இந்திய துணை கண்டத்துக்கே முன்னோடித் திட்டமாக, நமது அரசில் செயல்படுத்தப்பட்டுள்ள மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்துக்கு உலக அங்கீகாரம் தேடிவந்துள்ளது. சிறப்பான முறையில்இந்தத் திட்டத்தை செயல்படுத்தி,கண்காணித்து மேம்படுத்தி வரும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கும், அவருக்கு துணை நிற்கும் சுகாதாரத்துறை செயலாளர், மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
இவ்வாறு கூறியுள்ளார்.