புதுடெல்லி:
சேலம் – உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள 6 புறவழிச்சாலைகள் 2023 ஜூலைக்குள் 4 வழிச்சாலையாக விரிவுபடுத்தப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
சேலம்-உளுந்தூர்பேட்டை இரு வழிச்சாலையாக இருந்தது. இதை 4 வழிச்சாலையாக மாற்ற மத்தியஅரசிடம் வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து, மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு கடந்த 2008ம் ஆண்டு சேலம்-உளுந்தூர்பேட்டை சாலையை 4 வழிச்சாலையாக மாற்ற ஒப்புதல் அளித்தது. அதன்படி சேலம் சீலநாயக்கன் பட்டியில் இருந்து உளுந்தூர்பேட்டை வரை 136 கிலோமீட்டர் தூரம் நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டது. ஆனால், இந்த சாலையின் பல இடங்கள் 2 வழிப்பாதையாகவும் உள்ளது. இந்த பணிகள் கடந்த 2013ம் ஆண்டு நிறைவு பெற்று செயல்பாட்டுக்கு வந்தது.
ஆனால், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகனங்களால், இச்சாலையில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. இதனால், இந்த சாலை முழுமையாக 4 வழிச்லையாக மாற்ற வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள், போக்குவரத்து ஆர்வலர்கள், பல்வேறு அரசியல் அமைப்பினர் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர்
இந்நிலையில் புறவழிச்சாலையில் விபத்துகளை தடுக்கக்கோரி அன்புமணி ராமதாஸ் செப்டம்பர் 2ம் தேதி எழுதிய கடிதத்திற்கு நிதின் கட்கரி பதிலளித்துள்ளார்.
அதில். சேலம் – உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள 6 புறவழிச்சாலைகள் 2023 ஜூலைக்குள் 4 வழிச்சாலையாக விரிவுபடுத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.