டொனெட்ஸ்க்: உக்ரைனை சின்னாப்பின்னப்படுத்தி வரும் ரஷ்யா படைகள், தற்போது முக்கிய நகரான டொனெட்ஸ்க் நகரை நோக்கி முன்னேறி வருகிறது. அதனால், பொதுமக்கள் அங்கிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு உக்ரைன் அறிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷிய படைகள் கடந்த பிப்ரவரி மாதம் 24-ம் தேதி தொடங்கிய தாக்குதல் தற்போது வரை நீடித்து வருகிறது. தாக்குதல் 4 மாதத்தை தாண்டியுள்ளது. இந்தப் போரில் இரு நாடுகளின் தரப்பிலும் அதிக அளவில் உயிர்சேதம் ஏற்பட்டுள்ளது . உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் போரில் உக்ரைனுக்கு உதவுவதாக பல நாடுகள் ஆதரவு தெரிவித்த நிலையில், ரஷ்யாவின் மிரட்டலுக்கு பயந்து ஒதுங்கிகொண்ட நிலையில், ரஷ்ய படைகள் உக்ரைன் நாட்டின் முக்கிய நகரங்களை தகர்ந்தெறிந்து, எலும்புகூடுகளாக மாற்றி வருகிறது. இதனால் உக்ரைன் உருக்குலைந்து வருகிறது.
இதனால், உக்ரைனில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் வாழ்வாதாரங்களை இழந்து, அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் உக்ரைனின் மற்றொரு முக்கிய நகரமான டொனெட்ஸ்க் நகரை சுற்றி ரஷ்ய படைகள் முன்னேறி வருகிறது. அதனால், பொதுமக்கள் அங்கிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு உக்ரைன் அரசு அறிவித்துள்ளது.
பொதுமக்களை பெருமளவில் வெளியேற்றுவது உயிர்களைக் காப்பாற்றும் மற்றும் உக்ரைன் ரஷ்யப் படைகளுடன் சிறப்பாகப் போராட உதவும் என்று டொனெட்ஸ்க் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், இந்த ஆண்டிற்கான (2022) உக்ரைன் மீட்பு மாநாடு சுவிட்சர்லாந்தில் நடைபெற்றது. இதில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி காணொலி வாயிலாக பங்கேற்றார். அப்போது பேசிய அவர், ரஷியா உடனான போரில் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனை புனரமைக்க 750 பில்லியன் டாலர் தேவை என தெரிவித்தார். இந்த நிதியை ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ள நாடுகள் வழங்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.