மாஸ்கோ: ரஷ்ய அதிபரை போர் குற்றவாளி, சர்வாதிகாரி என்று அமெரிக்க அதிபர் பைடன் குற்றம் சாட்டியதற்கு ரஷ்யா அரசு கடும்  எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த பரபரப்பான சூழலில்  துருக்கி எல்லைப்பகுதி நாடான போலந்து செல்ல பைடன் திட்டமிட்டு உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், அந்நாட்டின் அதிபர் புடின் குறித்து, அமெரிக்க அதிபர் ஜே பைடன் அண்மையில், கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சனம் செய்திருந்தார். புடின் போர் குற்றவாளி என்றும், ஒரு கொலைகார சர்வாதிகாரி, மூர்க்கத்தனம் கொண்டவர் என்றும் பைடன் குற்றம் சாட்டியிருந்தார்.

புடின் தொடர்பாக பைடன் பேசியுள்ள கருத்துக்கள் ஏற்றுக் கொள்ள முடியாதது என ரஷ்ய வெளியுறவுத்துறை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ரஷ்யாவுக்கான அமெரிக்கத் தூதர் ஜோன் சல்லிவனை, நேரில் அழைத்து தமது எதிர்ப்பை ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சு பதிவு செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், புடின் குறித்த பைடன் கருத்துக்கள் ஏற்றுக் முடியாதவை என்றும், உயர்ந்த பதவியில் இருப்பவருக்கு இது போன்ற வார்த்தைகள் தகுதியானதல்ல. ரஷ்யா-அமெரிக்கா உறவு விளிம்பு நிலையில் இருப்பதாகவும், மீண்டும் இது தொடர்ந்தால் தூதரக உறவை முறித்துக் கொள்வோம் என்றும், ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பரபரப்பான சூழலில் அமெரிக்க அதிபர் பைடன் அடுத்த வாரம் போலந்து செல்கிறார். மனிதாபிமான மற்றும் மனித உரிமைகள் நெருக்கடியை தூண்டியதும், உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கான சர்வதேச பதிலைப் பற்றி விவாதிக்க அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் மார்ச் 25-ஆம் தேதி போலந்துக்குச் செல்கிறார்.   போலந்து நாட்டின் தலைநகர் வார்சா சென்று, போலந்து அதிபர் ஆண்ட்ரேஜ் டுடாவுடன் உக்ரைன் நெருக்கடி குறித்து விவாதிக்க உள்ளார் என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி தெரிவித்தார்.

முன்னதாக பெல்ஜியத்தில் NATO, G7 மற்றும் ஐரோப்பிய தலைவர்களை சந்தித்து கலந்துரையாடுகிறார். பிப்ரவரி 24 அன்று ரஷ்ய படையெடுப்பு தொடங்கியதில் இருந்து உக்ரைனில் இருந்து 2 மில்லியனுக்கும் அதிகமான அகதிகள் போலந்திற்குள் தஞ்சமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடப்படுகிறது.