லண்டன்: இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதை எதிர்த்து நிரவ் மோடி இங்கிலாந்து கோர்ட்டில் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை அந்நாட்டு உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதனால், அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தும் முயற்சிகளில் இந்திய அமலாக்கத்துறை ஈடுபட்டுள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில், 14 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்றுவிட்டு அதனை திரும்ப செலுத்தாமல் வெளிநாட்டுக்கு தப்பியோடியவர் குஜராத்தைச் சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி. இவர் இஙகிலாந்தில் தலைமறைவாக வாழ்ந்து வந்தார். அவர் லண்டனில் வாழ்ந்து வருவதை உறுதி செய்யப்பட்ட நிலையில், இந்தியஅரசின் வேண்டுகோளை ஏற்று லண்டன் போலீசார் கடந்த 2019ம் ஆண்டு லண்டன் கைது செய்து வாண்ட்ஸ்வொர்த்’ சிறையில் அடைத்தனர். இதையடுத்து அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தும் வழக்கு லண்டனில் உள்ள, ‘வெஸ்ட் மினிஸ்டர்’ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நிரவ்மோடியை நாடு கடத்தலாம் என கடந்த பிப்ரவரி மாதம் லண்டன் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இந்தியாவில் அவருக்கு நியாயமான விசாரணை கிடைக்காது என்ற கூற்றை நிராகரித்jதுடன், இங்கிலாந்து உள்துறை செயலாளர் பிரிதி படேல் ஏப்ரல் மாதம் ஒப்படைக்க ஒப்புதல் அளித்தார்.
இதைத்தொடர்ந்து, நிரவ்மோடி தரப்பில், நாடுகடத்துவதற்கு எதிராக அவர் செய்திருந்த மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுமீதான விசாரணை முடிவடைந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது, நிரவ்மோடியின் கோரிக்கையை பிரிட்டன் உயர்நீதிமன்றம் ஏற்க மறுத்து அவரது மனுவை நிராகரித்துள்ளது. இதனால் அவர் விரைவில் இந்தியாவுக்கு அழைத்து வரப்படுவார் என எதிர்பார்க்கப் படுகிறது.