லண்டன்:

வங்கி முறைகேட்டில் ஈடுபட்ட இந்தியத் தம்பதி, இந்திய வம்சாவளியை சேர்ந்த சூதாட்ட தரகர் ஆகிய 3 பேரை நாடு கடத்த வேண்டும் என்ற மத்திய அரசின் கோரிக்கையை பிரிட்டன் நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

கடந்த 2000-ம் ஆண்டில் தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி கேப்டனாக இருந்த ஹான்சி குரோனியே மீதான மேட்ச் ஃபிக்சிங் குற்றச்சாட்டில் முக்கியக் குற்றவாளியாக சஞ்சீவ் குமார் சாவ்லா சாவ்லா சேர்க்கப்பட்டுள்ளார். இவர் கிரிக்கெட் சூதாட்டத் தரகர். இவர் தற்போது பிரிட்டனில் தங்கியுள்ளார். இவரை இந்தியாவுக்கு அனுப்பி வைக்குமாறு மத்திய அரசு கோரிக்கை விடுத்தது. இந்த வழக்கு விசாரணை லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் மத்திய அரசின் நாடு கடத்தும் கோரிக்கையை நீதிபதி நிராகரித்து உத்தரவிட்டார். இதேபோல பிரிட்டனில் குடியுரிமை பெற்ற இந்தியத் தம்பதி ஜீதேந்தர்-ஆஷா ராணி அங்குராலா ஆகியோர் இந்தியாவில் பொதுத் துறை வங்கியில் கடந்த 1990-93ம் ஆண்டில் சுமார் ரூ.20 லட்சம் முறைகேடு செய்ததாகக் குற்றச்சாட்டு உள்ளது.

லண்டனில் இந்த தம்பதியர் 2015ம் ஆண்டில் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இவர்களை இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும் என்ற மத்திய அரசின் கோரிக்கையை லண்டன் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. தம்பதிக்கு தற்போது 69 வயதாகிறது. சிபிஐ காலதாமதம் செய்தது ஏன் என்று கேட்டு நிராகரிப்பு செய்யப்பட்டுள்ளது.

இவர்களை போலவே பொதுத் துறை வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு பிரிட்டனுக்குத் தப்பியோடிய தொழிலதிபர் விஜய் மல்லையாவை நாடு கடத்தக் கோரும் மனுவும் லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் தான் விசாரணை நடக்கிறது. மல்லையாவை தவிர மேலும் 5 பேரை பிரிட்டனில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்த மத்திய அரசு முயற்சி எடுத்து வருகிறது.