பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி, கலையரசன், ஜான் கொக்கென், துஷாரா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘சார்பட்டா பரம்பரை’. அமேசான் ஓடிடியில் வெளியாகியுள்ள இந்தப் படத்தை விமர்சகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

இதில் திமுக கட்சிக்காரராக பசுபதி நடித்திருப்பார். மேலும், ஒரு காட்சியில் எம்.ஜி.ஆரைப் பற்றி சுவர் விளம்பரமும் இடம்பெற்றிருக்கும்.

இந்நிலையில், ‘சார்பட்டா பரம்பரை’ படத்துக்கு திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏவுமான உதயநிதி ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இந்தப் படம் தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில் உதயநிதி ஸ்டாலின் கூறியிருப்பதாவது:

“70-களின் பின்னணியில் குத்துச்சண்டை விளையாட்டை மையப்படுத்தி வெளிவந்துள்ள ’சார்பட்டா பரம்பரை’ முக்கியமான திரைப்படம். அந்த காலத்தில் இருந்த அரசியல் நெருக்கடி நிலையையும், அதை கழகம் – கலைஞர் – கழக தலைவர் எதிர்கொண்ட விதத்தையும் கதையோடு காட்சிப்படுத்தியிருப்பது சிறப்புக்குரியது.

கபிலனாக அசத்தியுள்ள நண்பர் ஆர்யா, கழகத்துக்கார்-ரங்கன் வாத்தியாராக பசுபதி சார், டான்ஸிங் ரோஸ் ஷபீர், வேம்புலி ஜான் கொக்கென், ஜான் விஜய் என ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் கதையில் வாழ செய்துள்ள நண்பர் இயக்குநர் பா.இரஞ்சித்-க்கும், ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் வாழ்த்துகள்” என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.