திருவண்ணாமலை

நாடாளுமன்றத் தேர்தலுக்காக எரிவாயு விலையைப் பிரதமர் மோடி குறைத்துள்ளதாக உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

நேற்று திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் அண்ணாதுரையை ஆதரித்து திருவண்ணாமலையில் தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் திறந்த வேனில் நின்று பிரசாரம் மேற்கொண்டார்.

அவர் தனது பிரச்சாரத்தில்

“கடந்த 2014-ம் ஆண்டு ரூ.450 ஆக இருந்த கியாஸ் சிலிண்டரின் விலை தற்போது ரூ.1100 ஆக உள்ளது. தேர்தல் வருகிறது என்றதும் மோடி கியாஸ் சிலிண்டர் விலையில் ரூ.100-ஐ குறைத்து நாடகம் ஆடுகிறார். ஜெயித்து விட்டு வந்தால் அவர் சிலிண்டருக்கு ரூ.500 ஏற்றினாலும் ஏற்றுவார். நம்முடைய முதல்வர் இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் 100 சதவீதம் கியாஸ் சிலிண்டர் ரூ.500-க்கு கொடுப்போம் என்று வாக்குறுதி அளித்துள்ளார்.  மேலும் பெட்ரோல் 1 லிட்டர் ரூ.75-க்கும், டீசல் 1 லிட்டர் ரூ.65-க்கும் கொடுப்பேன் என்றும் தெரிவித்துள்ளார். 

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, “உதயநிதிக்கு வேற வேலையே இல்லை. தேர்தல் வந்தாலே போதும் ஒரு கல்லைத் தூக்கிக் காட்டுகிறார்” என்கிறார். நான் சொல்லிவிட்டேன் நீங்கள் எய்ம்ஸ் ஆஸ்பத்திரியைக் கட்டி முடிக்கும் வரையில் அந்த கல்லைத் தர மாட்டேன் என்று. நான் எய்ம்ஸ் கல்லைத் தான் தூக்கிக் காட்டுகிறேன். ஆனால் நீங்கள் மோடியைப் பார்த்தால் பல்லைக் காட்டுகிறீர்கள். இப்படி பல்லைக் காட்டி மாநிலத்தின் உரிமைகள் அனைத்தையும் அவரிடம் விட்டுக் கொடுத்து விட்டார். 

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சீபுரம், தென் மாவட்டங்களில் திருநெல்வேலி, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் பெருமழை பெய்தபோது, மோடி எட்டி கூட பார்க்கவில்லை. தற்போது 10 நாட்களாகத் தமிழகத்திற்குத் தேர்தல் பிரசாரத்திற்காக வருகிறார். 

மழை பாதிப்புக்கு நாம் கேட்ட ரூ.37 ஆயிரம் கோடியில் ஒரு பைசா கூட மத்திய அரசு கொடுக்கவில்லை. நாம் 1 ரூபாய் வரியாகக் கொடுத்தால் அவர்கள் நமக்குக் கொடுப்பது வெறும் 29 பைசா மட்டும் தான். அதனால் மோடியை நீங்கள் பெயர் சொல்லிக் கூப்பிடாதீர்கள். இனிமேல் அவர் பெயர் மிஸ்டர் 29 பைசா. இதுதான் நாம் அவருக்கு வைத்து உள்ள செல்ல பெயர். ” 

என்று பேசினார்.