ஜெயங்கொண்டம்
தமிழகத்தில் பாஜக டெபாசிட் கூட வாங்காது என உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
நேற்று இரவு அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அண்ணா சிலை பகுதியில், சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் தொல்.திருமாவளவனுக்கு ஆதரவு கோரி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் \ பிரசாரத்தில் ஈடுபட்டார்.
உதயநிதி தனது உரையில்,
”தற்போது பானை சின்னம் புகழ் பெற்ற சின்னமாகியுள்ளது. 2018 ஆம் ஆண்டு முதல் பல்வேறு தலைவர்களுக்கு நான் பிரசாரம் செய்துள்ள என் வாழ்வில் இது ஒரு பொன்னாள். முதன்முதலாக திருமாவளவனுக்காக நான் பிரசாரம் செய்ய வந்துள்ளேன். திருமாவளவனை 3 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்ய வேண்டும்.
திமுக ஆட்சியில் ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க. ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளன. தடுப்பூசி குறித்து பயத்தை போக்கி கோவிட் வார்ட்டுக்கு சென்ற ஒரே முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி அமைத்தவுடன் கடும் நிதி நெருக்கடியிலும் மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து திட்டத்தைச் செயல்படுத்தினார்.மற்ற மாநிலங்கள் திராவிட மாடலின் திட்டங்களைப் பின்பற்றுகின்றன.
விரைவில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்டவர்களுக்கும் விரைவில் வழங்கப்படும். இந்தியா கூட்டணியின் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டது போல கியாஸ், பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும். அனைத்துச் சுங்கச்சாவடிகளும் அகற்றப்படும். 10 ஆண்டுகள் பிரதமராக இருந்தபோது தமிழகத்துக்கு வராதவர் கடந்த 10 நாட்களாக வந்து செல்கிறார். தமிழகத்தில் பா.ஜனதா டெபாசிட் கூட வாங்காது.
மத்திய அரசு தமிழக இயற்கை பேரிடருக்கு ஒரு பைசாகூட கொடுக்கவில்லை. கருப்புப் பணத்தை மீட்டு அனைவருக்கும் ரூ.15 லட்சம் வழங்கப்படும் என்ற மோடி 15 பைசா கூட கொடுக்கவில்லை. 22 மாணவர்கள் தமிழகத்தில் ‘நீட்’ தேர்வால் பலியானதற்கு பாஜக பதில் சொல்ல வேண்டும். அ.தி.மு.க. பதில் சொல்ல வேண்டும். ஏப்ரல் 19-ந் தேதி அன்று 40-க்கு 40 தொகுதிகளை வென்று கருணாநிதியின் பிறந்தநாளுக்குப் பரிசாகக் கொடுப்போம்.
2021 இல் அடிமைகளை விரட்டி இந்த ஆண்டில் அடிமைகளின் உரிமையாளர்களைத் தேசிய அளவில் விரட்டுவோம். முதல்வர் மு க ஸ்டாலின் அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் இடத்தில் இருக்க வேண்டும்.”
என்று கூறினார்.