சென்னை
தமிழக துணை முதல்வர் உதயநிதி முன்னாள் சிறைவாசிகள் 750 பேருக்கு சுயதொழில் தொடங்க உதவித்தொகை அளித்துள்ளார்.
தமிழக சிறை மீண்டோர் நலச்சங்கத்தின் சார்பில், சிறை மீண்டவர்களுக்கு சுயதொழில் தொடங்குவதற்கும், வாழ்வாதாரத்தை நிலைநிறுத்துவதற்கும் தேவையான நிதி உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இவர்களுடைய சமூகப் புத்துயிர்ப்பை உறுதி செய்யும் வகையில், வேலைவாய்ப்புகள், திறன் மேம்பாட்டு பயிற்சிகள் மற்றும் மறுவாழ்வு திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன.
இந்தியாவில் தமிழ்நாடு மட்டுமே சிறை மீண்டோர் நலச்சங்கத்தை செயல்படுத்தி வரும் ஒரே மாநிலமாக திகழ்வது, மிகுந்த பெருமைக்குரியதாகும். இது, தமிழ்நாடு அரசு மற்றும் சிறைத்துறை மேற்கொள்ளும் முன்மாதிரியான மறுவாழ்வு முயற்சிகளின் ஒரு முக்கிய அங்கமாக விளங்குகிறது.
இன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறையின் தமிழக சிறை மீண்டோர் நலச்சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக சிறைகளிலிருந்து விடுதலை செய்யப்பட்ட 750 முன்னாள் சிறைவாசிகளுக்கு, தமிழ்நாடு சிறை மீண்டோர் நலச்சங்கம் மூலமாக கறவை மாடுகள் வாங்குதல், தையல் தொழில், தேநீர் கடை, சலவைத் தொழில், உணவகம் அமைத்தல் போன்ற சுயதொழில்கள் தொடங்கிட 3 கோடியே 75 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கிடும் அடையாளமாக 10 முன்னாள் சிறைவாசிகளுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் காசோலைகளை வழங்கினார்.
சட்டம், நீதிமன்றங்கள், சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர்சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார், காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால், சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறை தலைமை இயக்குநர் முனைவர். மகேஷ்வர் தயாள், சிறைத்துறை தலைவர் (தலைமையிடம்) இரா.கனகராஜ், மதுரை சரக சிறைத்துறை துணைத் தலைவர் மற்றும் சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை உயர் அலுவலர்கள் இந்நிகழ்ச்சியில், கலந்து கொண்டனர்.