டெல்லி: ஜனாதனம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அமைச்சர் உதயநிதியின் கருத்துக்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், மூத்த காங்கிரஸ் தலைவர் டாக்டர் கரண் சிங் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார் . அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்துக்கள் மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்றும் அவற்றை துளியும் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார். அதே வேளையில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி வரவேற்பு தெரிவித்து உள்ளார். உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்தில் எந்த ஒரு தவறும் இல்லை என தெரிவித்துள்ளார்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவரான கரண்சிங் 1980 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ்(யு) சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1989-1990 இல், அவர் 1989-1990 இல் அமெரிக்காவில் இந்திய தூதராக பணியாற்றினார், மேலும் இந்த அனுபவம் அவர் எழுதிய “சுருக்கமான சோஜோர்ன்” புத்தகத்தின் பொருளாக மாறியது. 1967 முதல் 1984 வரை கரண் சிங் மக்களவை உறுப்பினராக இருந்தார். முன்னாள் ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தின் ஆளுநராக பற்றியாற்றி இருப்பதுடன், இந்திய சர்வதேச மையத்தின் ஆயுள் அறங்காவலராகவும் தலைவராகவும் இருந்துள்ளார்.
இவர், சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் பேசிய இருப்பதை கடுமையாக கண்டித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என உதயநிதி கூறியிருப்பது மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த தேசத்தின் கோடிக்கணக்கான மக்கள் சனாதன தர்மத்தின் கொள்கைகளை குறைந்த அளவிலோ அல்லது அதிக அளவிலோ பின்பற்றி வருகிறார்கள். அதுமட்டுமின்றி, உலகின் மிகப் பெரிய சனாதன தர்மக் கோயில்கள் தமிழ்நாட்டின் தஞ்சாவூரில், ஸ்ரீரங்கத்தில், திருவண்ணாமலையில், சிதம்பரத்தில், மதுரையில், சுசீந்திரத்தில், ராமேஸ்வரத்தில் இன்னும் பல இடங்களில் உள்ளன.
ஒரு பொறுப்புள்ள அரசியல்வாதி இம்மாதிரி முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத கருத்துகளைத் தெரிவிப்பது அதிர்ச்சியளிக்கிறது. தமிழ் கலாச்சாரத்தின் மீது மிகப் பெரிய மரியாதை எனக்கு உள்ளது. ஆனாலும், உதயநிதியின் கருத்துக்கு எனது வன்மையான எதிர்ப்பை தெரிவிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
அதுபோல, டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் அமைப்பு பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், “அனைத்து மதங்களையும் மதிக்க வேண்டும் என்பதே காங்கிரஸ் கட்சியின் கொள்கை. ஒவ்வொரு கட்சிக்கும் அவரவர் கருத்துகளைச் சொல்வதற்கான சுதந்திரம் இருக்கிறது. நாங்கள் ஒவ்வொருவரின் நம்பிக்கைகளையும் மதிக்கிறோம்” எனக் குறிப்பிட்டார்.
உதயநிதியின் கருத்து குறித்த கேள்விக்கு பதில் அளித்த காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத், “அது அவரது தனிப்பட்ட கருத்து. அதில், எனக்கு உடன்பாடு இல்லை” என தெரிவித்துள்ளார். அதுபோல ராஜஸ்தான் முதல்வர் அஷோக் கெலாட் ஏன் இது குறித்து எதுவும் பேசவில்லை?
இந்த நிலையில், உதயநிதியின் பேச்சை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வரவேற்று உள்ளார். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்து மதத்தின் மீது அதிக பற்று கொண்ட ராமானுஜர் சனாதனத்திற்கு எதிரான கருத்தை சொல்லி உள்ளார். தீண்டாமைக்கு எதிராக செயல்பட்டு புரட்சி செய்தவர் ராமானுஜர். மூடநம்பிக்கையை ஒழிக்க வேண்டும் என்பதுதான் சனாதன எதிர்ப்பு. இதற்கு பாரதி ஜனதா கட்சி அச்சப்பட, அலறி அடிக்க தேவையில்லை. இதுபோல, வள்ளலார் ராமலிங்க சுவாமிகள் மதம் என்னும் பேய் பிடிக்காது இருக்க வேண்டும் என்றும் சொல்லியுள்ளார்.
பகுத்தறிவு வரவேண்டும் என சொல்வது தவறானது இல்லை. மகாத்மா காந்தி தீண்டாமைக்கு எதிராக போராடியுள்ளார். சுவாமி விவேகானந்தர் மூடநம்பிக்கைகள் ஒழிய வேண்டுமென கூறியுள்ளார். இதையெல்லாம் சனாதனத்திற்கு எதிர்ப்பாக கூற முடியாது. சமூகத்தில் மாற்றம் வேண்டும், பிற்போக்கு எண்ணங்கள் அகல வேண்டும் என்பதுதான்.மொழி, இனம், ஜாதி, மதம் ஆகியவற்றை சொல்லி அதனை தூண்டி, பாரதிய ஜனதா கட்சி வாக்கு வங்கியை பெற சனாதனத்தை பெரிதாக்கி வருகின்றனர்.
உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்தில், எந்த ஒரு தவறும் இல்லை. சனாதனத்தை சீர்திருத்த வேண்டும், பகுத்தறிவு வேண்டும் என்று கூறுவது இந்துக்கு எதிர்ப்பானதல்ல. ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது ஒற்றை ஆட்சி முறையை கொண்டு வரும் சர்வாதிகார போக்காகும். நம் நாடு பல மொழி, கலாசாரம், பண்பாடு என பன்முகத்தன்மை கொண்ட நாடு.
இங்கு நாடு தழுவிய சட்டம் கொண்டு வர வேண்டும் என்றால் மாநில அரசின் ஒப்புதலை பெற வேண்டும்.யாரையும் கேட்காமல் அதிபர் முறையை ஹிட்லர், முசோலினி போல் கொண்டு வர முயற்சிக்கிறார்கள். பாரதிய ஜனதா ஊழலற்ற ஆட்சி செய்கிறோம் என கூறுகிறார்கள். ஆனால் சுங்கச்சாவடி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நடந்த ஊழலை சிஏஜி அறிக்கை தெளிவாக விளக்கியுள்ளது.
எனவே இவர்களுக்கு மற்றவர்களை பத்தி பேச அருகதை இல்லை. தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது. குற்ற நடவடிக்கைகளுக்கு உடனுக்குடன் பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்பட்டு தான் வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.