சென்னை: தமிழ்நாட்டில் மகளிர் வேலைவாய்ப்பை ஊக்குவிக்க 23 மாவட்டங்களில் திறனகங்களை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

மேலும், அண்ணா பல்கலைக் கழகம் உள்ளிட்ட 11 அரசு பல்கலைக் கழகங்களில் நான் முதல்வன் திட்ட பல்கலைக் கழக செயல்பாட்டு மையங்களையும் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று சென்னை குறிஞ்சி முகாம் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் தமிழ்நாடு மகளிர் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட இருக்கும் நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்காக 23 மாவட்டங்களில் திறனகங்களை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

மேலும், இந்நிகழ்ச்சியில் அண்ணா பல்கலைக் கழகம் உள்ளிட்ட 11 அரசு பல்கலைக் கழகங்களில் நான் முதல்வன் திட்ட பல்கலைக் கழக செயல்பாட்டு மையங்களையும் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

தொடர்ந்து, தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்முன்னிலையில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் (TNSDC) மற்றும் மாநில திட்டக்குழு இடையே United Nations Development Programme (UNDP) தொழில்நுட்ப ஆதரவுடன், நிறுவன அமைப்புகளை வலுப்படுத்துதல், நிலையான செயற்பாட்டு நடைமுறைகள் (SOPs) உருவாக்குதல் மற்றும் ஒருங்கிணைந்த தொழில் வழிகாட்டுதல் குறித்து புரிந்துணர்வு ஒப்பந்தம் பரிமாறிக் கொள்ளப்பட்டது.

மேலும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் (TNSDC) மற்றும் IIT Madras இடையே மாவட்ட திறன் அலுவலர்கள் மற்றும் திட்ட நிர்வாகிகளுக்கான பயிற்றுநர் பயிற்சி (ToT) மற்றும் தொழில் வழிகாட்டல் பயிற்சி திட்டத்தை செயல்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டது.

தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் 2024-2025 ஆம் ஆண்டு மானியக் கோரிக்கை அறிவிப்பில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் தமிழ்நாடு மகளிர் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட இருக்கும் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க அனைத்து மாவட்டங்களிலும் ஒரு மாவட்ட திறன் மையம் உருவாக்கப்படும் என்று அறிவித்தார்.

இவ்வறிவிப்பினை செயல்படுத்தும் வகையில் 38 மாவட்டங்களிலும் மொத்தம் 5.96 கோடி ரூபாய் மதிப்பீட்டில் “திறனகம்” எனும் சிறப்பு மாவட்ட திறன் மையங்களை நிறுவியுள்ளது.

ஒவ்வொரு திறனகமும் கணினி வசதி, குளிர்சாதன வசதி, உபகரணங்கள் மற்றும் பிற அடிப்படை கட்டமைப்பு வசதிகளுடன் ஒரே இடத்தில் தொழில் வழிகாட்டல், திறன் மேம்பாட்டு ஆலோசனை, பயிற்சி இணைப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு வாய்ப்புகளுக்கான அணுகல் ஆகியவற்றை வழங்கும் ஒருங்கிணைந்த சேவை மையமாக செயல்படும். இம்மையங்கள் மாவட்ட ஆட்சித் தலைவரின் வழிகாட்டலில் மாவட்ட திறன் அலுவலர்களால் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் (TNSDC) ஆதரவுடன் நிர்வகிக்கப்படவுள்ளன.

நான் முதல்வன் திட்டம், பொறியியல், கலை மற்றும் அறிவியல், பாலிடெக்னிக் மற்றும் ITI மாணவர்களுக்கு எவ்வித நிதிச்சுமையும் இன்றி கல்வியாளர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள், வழிகாட்டிகள் மற்றும் நிர்வாகிகள் மூலம் திறன்களை வளர்க்கும் வகையில் ஒருங்கிணைந்த திறன் பயிற்சி வகுப்புகளை வழங்கி வருகிறது.

தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் 2025-2026 ஆண்டு அறிவிப்பில் தமிழ்நாடு முழுவதும் உள்ள 10 மாநில கலை மற்றும் அறிவியல் மற்றும் ஒரு தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தில் நான் முதல்வன் திட்டத்திற்காக பல்கலைக்கழக ‘’செயல்பாட்டு மையங்கள்’’ 1.10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும் என்று அறிவித்தார்.

இந்த நான் முதல்வன் பல்கலைக் கழக செயல்பாட்டு மையங்கள் நான் முதல்வன் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தவும், கண்காணிக்கவும் மற்றும் ஒருங்கிணைக்கவும் (NMUOC) ஒரு Nodal Centre ஆக செயல்படும். தொழில் துறைக்குத் தேவையான திறன் மேம்பாட்டுப் பாடப்பிரிவுகளைப் பல்கலைக்கழகப் பாடத்திட்டங்களோடு இந்த மையங்கள் ஒருங்கிணைக்கும். மாணவர்களுக்கு Internship, மற்றும் வேலை வாய்ப்புகளை வழங்க இந்த மையங்கள் உதவும். மாணவர் சேர்க்கை, திறன் சான்றிதழ் பெறுதல் மற்றும் வேலைவாய்ப்பு புள்ளி விவரங்களைக் கண்காணிக்க இந்த மையங்கள் உதவும்.

[youtube-feed feed=1]