ஈரோடு: திமுகவின் தேர்தல் அறிக்கையின் முக்கியமான அறிவிப்பான குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் 5 மாத காலத்திற்குள் செயல்படுத்தப்படும் என ஈரோடு கிழக்கு தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக வாக்கு வேட்டை யாடிய அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற போது திமுக தனது தேர்தல் வாக்குறுதியாக பேருந்தில் பெண்களுக்கு இலவச பயணம், குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை, பால் விலை குறைப்பு உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அறிவித்தது. அதில் தற்போது வரை 85% வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து வருகிறார். ஆனால் திமுக தேர்தல் வாக்குறுதியில் முக்கியமானது குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் இன்னும் செயல்படுத்தப்படவில்லை. இதற்கு நிதி ஆதாரம் தேவைப் படுவதால்,. அதற்கான உத்திகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதை எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இந்த நிலையில், வரும் 27ந்தேதி நடைபெற உள்ள ஈரோடு இடைத்தேர்தலையொட்டி அங்கு அனல்பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது. திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.
பொதுமக்கள் மத்தியில் பேசிய உதயநிதி, பாஜகவும், அதிமுகவும் சேர்ந்து கட்டிய எய்ம்ஸ் இது தான் என கடந்த சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது காட்டியது போல் மீண்டும் உதயநிதி ஒற்றை செங்கலை தூக்கி காண்பித்து கிண்டல் செய்தார்.
தொடர்ந்து பேசியவர், அண்ணாவின் பெயரை கட்சியில் வைத்துக்கொண்டு அவரின் கொள்கைகளுக்கு எதிராக செயல்படுகிறீர்கள் என இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ்யை விமர்சித்தார். ஜெயலலிதாவுக்கோ, உங்களை முதலமைச்சர் ஆக்கிய சசிகலாவிற்கோ, மக்களுக்கோ நீங்கள் உண்மையாக இல்லை. உங்கள் எஜமானர்கள் மோடி, அமித்ஷாவுக்கு மட்டுமே உண்மையாக இருக்கிறீர்கள் என எடப்பாடி பழனிசாமியை கடுமையாக குற்றம்சாட்டினார்.
எடப்பாடி பழனிசாமி அவர்களே 7 நாட்கள் ஷேவ் பண்ணாம இருந்தா எல்லாருக்கும்தான் மீசை வரும். பெரியார் மண்ணில் நின்று கொண்டு ஆண் பிள்ளையா? என்று கேட்கிறீர்கள் என கூறியவர், அமைச்சராக பொறுப்பேற்ற பின் முதன்முறையாக உங்களை சந்திக்க வந்திருக்கிறேன். கலைஞரின் பேரன், பெரியாரின் பேரனுக்கு வாக்கு கேட்டு வந்திருக்கின்றேன். கடந்த முறை 9,000 வாக்குகள் வித்தியாசத்தில் திருமகனை வெற்றி பெறச் செய்தீர்கள். இந்த முறை அவரது தந்தையை 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார்.
திமுகவின் பெரும்பாலான தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் தொடர்பாக முக்கிய தகவலை வெளியிட்டார். பெண்கள் மனதில் உள்ள கோரிக்கை என்னவென்று எனக்கு தெரியும். குடும்பத்தலைவிகளுக்கு உரிமைத்தொகை ஆயிரம் ரூபாய் எப்போது வழங்கப்படும் என்பது தான். பெண்களுக்கான உரிமைத்தொகை அதிகபட்சமாக 5 மாதங்களுக்குள் வழங்கப்படும். அதற்கான நடவடிக்கைகளை முதலமைச்சர் எடுத்து வருவதாக கூறினார்.