சென்னை: தமிழ்நாடு அமைச்சரவை இன்று மாலை மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் அமைச்சர் உதயநிதி துணைமுதல்வராக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 3 ஆண்டுகளில் 2 முறை அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க 15 நாள் பயணமாக முதலமைச்சர் ஸ்டாலின் வரும் 27ந்தேதி அமெரிக்கா புறப்படுகிறார். இதையொட்டி, அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது. கடந்த சில மாதங்களாகவே, அமைச்சர் உதயநிதியை துணைமுதல்வராக நியமிக்க வேண்டும் அவரது ஆதரவு அமைச்சர்கள் திமுக தலைமையை வலியுறுத்தி வரும் நிலையில், அவர் துணை முதல்வராக நியமனம் செய்யப்படுவார் என தகவல்கள் பரவின.
இந்த நிலையில், இன்று மாலை தமிழ்நாடு அமைச்சரவையில் மிகப்பெரிய மாற்றம் நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலமைச்சர் 27 ஆம் தேதி அமெரிக்கா செல்வதையொட்டி அமைச்சரவையில் இன்று மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட உள்ளது.
மூத்த அமைச்சர் ஒருவர் மற்றும் வேறு இரண்டு அமைச்சர்கள் மாற்றப்பட்டு புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்றும், பல அமைச்சர்களிடம் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமைச்சர் மெய்யநாதன் அல்லது சி.வி.கணேசன் இருவரில் ஒருவரின் பதவி பறிக்கப்பட உள்ளதாகவும், சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கும் புதிதாக அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விளையாட்டுத்துறை அமைச்சர் துணை முதல்வராகும் வாய்ப்பு இருப்பதாகவும், இல்லையேல் அவருக்கு காவல்துறை, நகராட்சி நிர்வாகம் உள்பட மூத்த அமைச்சர்களிடம் உள்ள சில முக்கிய பறிக்கப்பட்டு உதயநிதிக்கு ஒதுக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் மூத்த அமைச்சர்கள் செய்வதறியாது திகைத்து உள்ளனர்.