ஆட்சி நிலைக்குமா? உத்தவ் தாக்கரே ஆட்சிமீது நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு…

Must read

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆளும் சிவசேனா கட்சிக்கு எதிராக, அவர்களது கட்சியின் பெரும்பான்மையான எம்எல்ஏக்கள், ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளதால், அங்கு உத்தவ் தாக்கரே தலைமையிலான ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் பெரும்பான்மை நிரூபிக்க மாநில கவர்னர் உத்தரவிட்டுள்ளார்.

மகாராஷ்டிர மாநிலத்தில், முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா – காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய மாநில அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன், அசாம் மாநிலம் கவுகாத்தியில் முகாமிட்டு உள்ளார். அவருடன் சுயேச்சை எம்எல்ஏக்கள் உட்பட சுமார் 40 எம்எல்ஏக்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையில் அதிருப்தி எம்எல்ஏக்களை பதவி நீக்கம் செய்ய சிவசேனா கட்சி நோட்டீஸ் அனுப்பியது. ஆனால், அதற்கு உச்சநீதிமன்றம் தடை போட்டுள்ளது. அப்போது உச்சநீதிமன்றத்தில், ஆளும் சிவசேனா அரசுக்கு ஆதரவை வாபஸ் பெறுவதாக அதிருப்தி எம்எல்ஏக்களின் தலைவர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்தார்.

இதையடுத்து திருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அதிருப்தி எம்எல்ஏக்கள்  இன்று மும்பைக்கு வருகின்றனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஷிடே,  மும்பை சென்று, ஆளுநர் பி.எஸ்.கோஷ்யாரியை சந்தித்துப் பேசவுள்ளோம். யாருக்கும் சந்தேகம் வேண்டாம். என்னுடன் வந்துள்ள 50 எம்எல்ஏ.க்களும், சொந்த விருப்பத்தின் பேரில் வந்து மகிழ்ச்சியாக உள்ளனர். நாங்கள் ஒரு குறிக்கோளுடன் வந்துள்ளோம். சுயநலத்துக்காக வரவில்லை. இந்துத்துவா மற்றும் பாலசாகிப் கொள்கையுடன் நாங்கள் வந்துள்ளோம் என தெரிவித்தார்.

இந்த பரபரப்பான சூழலில்,  முன்னாள் பாஜக முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவரும்,  பட்னாவிஸ் நேற்று மாலை கவர்னர் கோஷ்யாரியை 8 சுயேச்சை எம்எல்ஏக்களுடன் சென்று சந்தித்து பேசினார். அப்போது, கடிதம் ஒன்றை அளித்தார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்தபட்னாவிஸ், சிவசேனாவின் 39 எம்.எல்.ஏ.க்கள் காங்கிரஸ்-என்.சி.பி.யுடன் கூட்டணியில் இருக்க விரும்பவில்லை என்று பலமுறை கூறியுள்ளதாக தெரிவித்தவர்,  எனவே, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்குமாறு முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவை கேட்டுக் கொள்ள வேண்டும் என்று ஆளுநரிடம் வலியுறுத்தியதாக  குறிப்பிட்டார்.

இதையடுத்து, மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என கவர்னர் கோஷ்யாரி உத்தரவிட்டு உள்ளார். மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, நாளை மாலை 5 மணிக்குள் சட்டபேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக மாநில சட்டமன்ற செயலருக்கு கவர்னர் எழுதியுள்ள கடிதத்தில்,  நாளை காலை 11 மணிக்கு சிறப்பு சட்டப்பேரவை கூட்டப்பட வேண்டும் என்றும், தொடர்ந்து மாலை 5 மணிக்கு சிறப்பு கூட்டம் நடத்தவும் அறிவுறுத்தி உள்ளார்.  நாளைய சிறப்புபேரவை கூட்டத்தை வீடியோ பதிவு செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில், நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்கவுள்ளதாக, சிவசேனா அதிருப்தி எம்எல்ஏவான ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். இதையடுத்து, ஏக்நாத் ஷிண்டே மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் அசாம் மாநிலம் கவுகாத்தியில் இருந்து இன்று மும்பை திரும்புகின்றனர்.

இதனால் உத்தவ் தாக்கரே அரசு கவிழும் சூழல் எழுந்துள்ளது. அதைத்தொடர்ந்து, சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் மற்றும் சுயேச்சை ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உத்தவ்தாக்கரே ஆட்சி கவிழ்கிறது? மகாராஷ்டிர அரசுக்கு ஆதரவு வாபஸ் என உச்சநீதி மன்றத்தில் அதிருப்தி எம்எல்ஏக்கள் தகவல்…

More articles

Latest article