சென்னை: மகாராஷ்டிரா மாநிலத்தில் உத்தவ்தாக்கரே தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு எதிராக சிவசேனா எம்எல்ஏக்களே போர்க்கொடி தூக்கி உள்ளதால், ஆட்சி கவிழும் நிலை உருவாகி உள்ளது. ஏற்கனவே 22 பேர் உத்தவ்தாக்கரேவுக்கு எதிராக இருந்த நிலையில், இன்று மேலும் 3 எம்எல்ஏக்கள் எதிர்முகாமுக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் 14 சிவசேனா எம்.பி.க்களும் ஷிண்டேவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா தலைவரும் முதல்வருமான உத்தவ் தாக்கரே தலைமையிலான மகா விகாஸ் அகாதி கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டணியில், சிவசேனா – காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த கூட்டணி ஆட்சியில் அவ்வப்போது கூட்டணி கட்சியினரால் பிரச்சினைகள் ஏற்படுவதும், அதை சரி செய்யப்படுவதாக தொடர்ந்து வருகிறது.
இந்த நிலையில், முதல்வர் உத்தவ்தாக்கரேவுக்கு எதிராக, சிவசேனா மூத்தத் தலைவர் ஏக்நாத் ஷிண்டே, தனது ஆதரவாளர்களுடன், பாஜக முகாமுக்கு ஆதர வாக செயல்பட்டு வருகிறார். ஏற்கனவே 22 எம்எல்ஏக்களுட்ன் அவர் தலைமறைவான நிலையில், தற்போது மேலும் 3 சிவசேனா எம்எல்ஏக்கள் ஷிண்டேவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் அனைவரும், அசாம் மாநிலம் கவுகாத்தியில் தங்கியுள்ளனர்.
ஆட்சிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய ஏக்நாத் ஷிண்டேவை கட்சி தலைமை கொறடா பதவியில் இருந்து நீக்கி உத்தரவிட்டது. இந்த நிலையில், அமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு 5 சுயேட்சை எம்எல்ஏக்கள் உட்பட 22 எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாகவும், அவர்கள் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் நேற்று தகவல் வெளியானது. இந்தநிலையில், இன்று மேலும் 3 எம்எல்ஏக்கள் ஏக்நாக் ஷிண்டேவுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக இன்று காலை மும்பையில் இருந்து புறப்பட்டு கவுகாத்திக்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அத்துடன் 14 சிவசேனா எம்.பிக்களும் ஷிண்டேவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ஆட்சி கவிழும் சூழல் உருவாகி உள்ளது.
இந்த நிலையில், உத்தவ் தாக்கரேயும் தமது ஆதரவு எம்எல்ஏக்களுடன் இன்று மாலை ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முதலமைச்சர் உத்தவ் தாக்கரே இல்லத்தில், இன்று மாலை 5 மணிக்கு, சிவசேனா எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக அனைத்து எம்எல்ஏக்களுக்கும் வாட்ஸ் அப், மெயில் மூலம் தகவல் அனுப்பப்பட்டு உள்ளது. இந்தக் கூட்டத்தில் அனைத்து சிவசேனா எம்எல்ஏக்களும் பங்கேற்க வேண்டும் என்றும், இதில் பங்கேற்காத எம்எல்ஏக்கள், கட்சியை விட்டு வெளியேற நினைப்பதாக கருதப்படும் என்றும், உங்கள் உறுப்பினர் பதவி ரத்து செய்யப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டு உள்ளது.