மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை கல்லூரி படிப்புக்கான கியூட்  நுழைவுத் தேர்வு தேதி அறிவிப்பு!

Must read

டெல்லி: நடப்பாண்டு முதல் நாடு முழுவதும் மத்திய பல்கலைக்கழகங்களில் கல்லூரி படிக்க  கியூட் (CUET) நுழைவுத்தேர்வு கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது கியூட் தேர்வுக்கான தேதிகள் வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி, ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 10 வரை கியூட் தேர்வு  நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் நடப்பு கல்வியாண்டு முதல், இளங்கலை மாணவர் சேர்க்கைக்கு  பொது நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதன்படி,, மத்திய பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு (CUET UG 2022) தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி,  ஜூலை 15, ஜூலை 16,ஜூலை 19,ஜூலை 20,ஆகஸ்ட் 4,ஆகஸ்ட் 5,ஆகஸ்ட் 6,ஆகஸ்ட் 7, ஆகஸ்ட் 8 மற்றும் ஆகஸ்ட் 10 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

மேலும், இந்த தேர்வானது,  கணினி அடிப்படையில்  நடத்தப்படும் என்றும், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி, குஜராத்தி, ஒடியா, பெங்காலி, அஸ்ஸாமி, பஞ்சாபி, ஆங்கிலம், ஹிந்தி மற்றும் உருது உள்ளிட்ட 13 மொழிகளில் இத்தேர்வு நடைபெறும் என அறிவித்துள்ளதுடன், தேர்வானது   இந்தியா முழுவதும் 554 நகரங்களிலும், இந்தியாவிற்கு வெளியே 13 நகரங்களில் நடத்தப்படவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

CUET UG-க்கு ஆன்லைன் விண்ணப்பப் படிவம்,முன்னதாக ஏப்ரல் 2 அன்று வெளியிடப்பட்டது மற்றும் காலக்கெடு மே 31 வரை நீட்டிக்கப்பட்டது. மேலும்,மத்திய பல்கலைக்கழகங்களில் (யுஜி பாடப்பிரிவுகள்) நுழைவதற்கான ஒரே தேர்வு இது என்பதால், விண்ணப்பதாரர்களின் கோரிக்கையின் பேரில் விண்ணப்பிப்ப தற்கான பதிவு மீண்டும் ஒருமுறை கடைசியாக திறக்கப்படுகிறது.

இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள அனைத்து விண்ணப்பதாரர்களும் http://cuet.samarth.ac.in என்ற இணைய தளம் மூலமாக இன்றும்,நாளையும் விண்ணப்பிக்கலாம் என்றும்,ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள்,விண்ணப்பப் படிவத்தில் திருத்தங்களைச் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது நுழைவுத்தேர்வை முன்னிட்டு விண்ணப்பதாரர்களுக்கு இ-அட்மிட் கார்டு NTA இணையதளம் https://cuet.samarth.ac.in/ மூலம் தற்காலிகமாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும்,இத்தேர்வு தொடர்பான கேள்விகளுக்கு cuetug@nta.ac.in  என்ற ஹெல்ப்லைன் மின்னஞ்சல் ஐடிகள் மற்றும் 011-40759000 / 011-6922 7700 என்ற எண்களையும் தொடர்பு கொள்ளலாம் என்றும் என்டிஏ தெரிவித்துள்ளது.

More articles

Latest article