சென்னை:
மாற்றுத்திறனாளிகள் குறித்து உதயநிதி எம்.எல்.ஏ. எழுப்பிய கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்தார்.
இன்று சட்டப்பேரவையில் கேள்வி – பதில் நேரத்தில் பேசிய சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின், “இந்திய மாநிலங்களின் முதலமைச்சர்களில் நம்பர் 1 முதலமைச்சர் என்று பெயரெடுத்து திராவிட மாடல் ஆட்சியை அமைத்து வரும் முதலமைச்சருக்கு நன்றி. எதிர்கட்சித் தலைவர், எதிர்க்கட்சி துணைத்தலைவருக்கு தனிப்பட்ட முறையில் நன்றி. கடந்த முறை பேசும்போது வெளிநடப்பு செய்து விட்டீர்கள். இப்போது பேசுகையில் அவையில் இருப்பதற்கு நன்றி. அப்படி வெளிநடப்பு செய்து சென்றாலும், என்னுடைய காரில்தான் தவறுதலாக ஏறுகிறீர்கள். அடுத்தமுறை தாராளமாக என் காரை எடுத்து செல்லலாம்;ஆனால் கமலாலயம் சென்றுவிட வேண்டாம்: என்றார்.
அப்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம், “எங்கள் கார் எப்போதும் எம்.ஜி.ஆர். மாளிகை நோக்கியே செல்லும்” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகத்தின் ஆணையராக மாற்றுத்திறனாளியை நியமிக்க வேண்டும் என்றும், 18 வயதுக்கு மேற்பட்ட திருநங்கைகள் அனைவருக்கும் மாத உதவித்தொகை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.
இதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாற்றுத்திறனாளிகள் குறித்து உதயநிதி எம்.எல்.ஏ. எழுப்பிய கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தார்.