உபேர் இந்தியா நிறுவனம், தங்களது வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை வலுப்படுத்த, இருபத்து நான்கு மணிநேரமும் செயல்படும் ஹெல்ப்லைனை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.
பிரபல கால்டாக்சி நிறுவனமான உபேர், கால் டாக்சி டிரைவர்கள் மற்றும் கட்டண முறைகேடு தொடர்பாக புகார் தெரிவிக்கவும் நிறுவனத்தைத் தொடர்புகொள்ளவும் அதன் மொபைல் செயலி (App) மூலமாக மட்டுமே உபேர் நிறுவனத்தைத் தொடர்புகொள்ள முடிந்தது. ஆனால், எளிதில் தொடர்பு கொள்ளும் வகையில், ஹெல்ப்லைனை அறிமுகப்படுத்தி உள்ளது.
இதன் மூலமாக, உபேர் வாகனத்தில் சென்று கொண்டிருக்கும்போதே, இந்நிறுவனத்தின் பாதுகாப்புக் குழுவைத் தொடர்புகொள்ள முடியும். கடந்த ஆகஸ்ட் 27ம் தேதி முதல், உபேர் இந்தியா இதை செயல்பாட்டுக்குக் கொண்டுவந்துள்ளது. முன்னதாக, கடந்த மார்ச் மாதம் சண்டிகரில், இதற்கான முன்னோட்டம் பார்க்கப்பட்டது. தற்போது பயன்பாட்டிலுள்ள உபேர் ஆப்பிலேயே இந்த வசதி சேர்க்கப்பட்டுள்ளது.
அவசரக் காலங்களில் காவல்தறை அதிகாரிகளுடன் உபேர் வாடிக்கையாளர்களை இந்த ஹெல்ப் லைன் மூலம் இணைக்க முடியும். வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் சிக்கல்கள் அனைத்தும், உபேர் ஆப் மூலமாகவே இதுவரை கையாளப்பட்டது. அதன்பின்னர், மின்னஞ்சல் மூலமாக வாடிக்கையாளர்களைத் தொடர்புகொண்டது உபேர் குழு. ஆனால், இந்த ஹெல்ப்லைன் வசதி மூலம், பயணத்தின்போது உபேர் பாதுகாப்புக் குழுவோடு தொடர்பில் இருக்கமுடியும். இதனால், பயணத்தில் ஏற்படும் சக பயணிகளின் தவறான நடத்தை, ஓட்டுநர் குறித்த பிரச்னைகள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தெற்காசியா மற்றும் உபேர் இந்தியாவின் மத்திய செயல்பாட்டுத் தலைவர் பவன் வைஷ், இதுகுறித்துக் கூறுகையில், “எங்கள் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதோடு, அவர்களையும் பாதுகாப்பாக உணரச்செய்கிறோம். உபேர் பயணத்தில் ஏதாவது அசவுகரியம் ஏற்பட்டால், தங்களால் நிறுவனத்தைத் தொடர்புகொள்ள முடியும் என வாடிக்கையாளர்கள் நினைக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே, உபேர் சேவைக்கான பணப்பரிமாற்றம் முதன்முதலில் இந்தியர்களுக்காக அறிமுகப் படுத்தியது உபேர் . தற்போது, ஓட்டுநர்களுக்காகவும் வாடிக்கையாளர்களுக்காகவும் உபேர் முதன்முறையாகப் பாதுகாப்புக்காக ஒரு ஹெல்ப்லைனைக் கொண்டுவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்தியாவில் போக்குவரத்தை மேம்படுத்த, உபேர் நிறுவனம் பேருந்து சேவையையும் கொண்டுவரத்திட்டமிட்டுள்ளது.