துபாய்

க்கிய அரபு அமீரகத்தில் பணி புரிய செல்வோருக்கு நன்னடத்தை சான்றிதழ் தேவை இல்லை என அமீரக அரசு அறிவித்துள்ளது.

அரபு நாடுகளில் வெளிநாட்டை சேர்ந்த பலர் பணி புரிந்து வருகின்றனர்.   அவ்வாறு பணி புரிவோர்களில் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளார்கள்.   வெளிநாட்டில் இருந்து அரபு நாட்டுக்கு பணி புரிய செல்வோருக்கு உள்ளூர் காவல்துறையில் இருந்து நன்னடத்தை சான்றிதழ் அளிக்க வேண்டியது கட்டாயமாக இருந்து வந்தது.

தற்போது அமீரக அரசு அற்விப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.  அதில், ”அரபு அமீரகத்தின் வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளிநாட்டில் இருந்து அமிரகத்தில் பணி புரிவோருக்கு தெரிவித்துக் கொள்வது,  முன்பு வெளிநாட்டில் இருந்து பணி புரிய வருவோருக்கு தத்தம் நாட்டில் இருந்து நன்னடத்தை சான்றிதழ் தேவை என அறிவித்திருந்தது.  தற்போது அந்த உத்தரவு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.    மறு அறிவிப்பு வரும் வரையில் வெளிநாட்டில் இருந்து பணி புரிய வருவோருக்கு நன்னடத்தை சான்றிதழ் தேவை இல்லை என அறிவிக்கப்படுகிறது” எனக் குறிப்பிடப் பட்டுள்ளது.

இதற்கு வெளிநாட்டினர் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.  கேரளாவை சேர்ந்த ரஃபீக் என்பவர், “இது வரவேற்கத் தகுந்த ஒரு அறிவிப்பாகும்.   நன்னடத்தை சான்றிதழ் வாங்க முதலில் ரூ.1000 செலுத்தி விட்டு காத்திருக்க வேண்டும்.   அந்த சான்றிதழ் கிடைக்க பல மாதங்கள் வரை காத்திருக்க வேண்டி இருக்கும்.   அத்துடன் அதைப் பெற பல செலவுகள் செய்ய வேண்டி இருக்கும்.   இந்த அறிவிப்பின் மூலம் அந்த செலவுகளுக்கு தேவை இல்லை” என கூறி உள்ளார்.