பியாங்யோங்

ரலாற்றில் முதல் முறையாக ஒரு வட கொரிய அதிபர் தென் கொரிய இசை நிகழ்வை கண்டு ரசித்துள்ளார்.

தென் கொரியாவை சேர்ந்த இசைக் குழு கே பாப் ஸ்டார்ஸ் குழு மிகவும் புகழ்பெற்றதாகும்.   இந்தக் குழுவில் மொத்தம் 120 பேர் உள்ளனர்.  அவர்களில் 11 பாடகர்கள் உட்பட நடனக் கலைஞர்கள்,  இசைக் கருவிகள் வாசிப்போர், தற்காப்புக் கலை வல்லுனர்கள் என பலதரப்பட்டவர்களும் உள்ளனர்.   அந்தக் குழு  நேற்று பியாங்யோங் நகரில் உள்ள கிராண்ட் தியேட்டர் என்னும் அரங்கில் தனது நிகழ்ச்சியை  நடத்தியது.

இந்த விழாவில் கலந்துக் கொள்ள வட கொரிய அதிபருக்கு அழைப்பு விடுக்கப் பட்டிருந்தது.  ஆனால் அதிபர் தரப்பில், “அதிபருக்கு ஏப்ரல் முதல்  வாரத்தில் அரசியல் சம்பந்தப்பட்ட பல நிகழ்வுகள் உள்ளது.  அதனால் எந்த ஒரு நிகழ்விலும் கலந்துக் கொள்ள நேரமில்லை”  என தெரிவிக்கப்பட்டது.

ஆனால் நேற்றைய நிகழ்வில் வட கொரிய அதிபர் கிம் ஜங் உன் தனது மனைவி மற்றும் தங்கையுடன் இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டார்.    வட கொரிய அதிபர் ஒருவர் தென் கொரிய நாட்டு இசை நிகழ்வுக்கு வருவது வரலாற்றில் இது முதல் முறையாகும்.   இந்த நிகழ்வை அதிபரும் அவர் மனைவியும் கைதட்டி ரசித்து பார்த்தனர்.

வட கொரிய அதிபரின் மனைவி ரி சோய் ஜு முன்னாள் பாடகி ஆவார்.   வட கொரிய அதிபர் இசைக் குழுவினரின் நிகழ்வை முழுவதும் ரசித்து பாராட்டி உள்ளார்.  மேலும் இசைக் குழுவினருடன் கை குலுக்கி தனது பாராட்டை தெரிவித்துள்ளார்.