20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபான் தீவிரவாதிகளுக்கு எதிராக போர் தொடுத்துவந்த அமெரிக்க படை நேற்றோடு முற்றிலும் விலக்கிக் கொள்ளப்பட்டது.

ஆகஸ்ட் 31 ம் தேதியுடன் அமெரிக்க படையினர் அனைவரும் ஆப்கானை விட்டு வெளியேறுவார்கள் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்ததைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 15 ம் தேதியே அந்நாட்டு அதிபரை வெளியேற்றி ஆட்சியைக் கைப்பற்றினர் தாலிபான்கள்.

சற்றும் எதிர்பாராத விதத்தில் தாலிபான்களிடம் ஆட்சி கைமாறியதைத் தொடர்ந்து அங்கிருந்த அமெரிக்க படையினர் மற்றும் அவர்களுக்கு உதவியாக ஊழியம் புரிந்த ஆப்கானியர்கள் என்று பலரும் நாட்டை விட்டு வெளியேற காபூல் விமான நிலையத்தில் முண்டியடித்தனர்.

ஓடுபாதையில் விமானம் செல்வதற்கு கூட வழியில்லாமல் குவிந்த மக்களை அமெரிக்க படையினர் துப்பாக்கி முனையில் விரட்டி அடித்து விமான நிலையத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

அமெரிக்க படையினர் வெளியேறியதைத் தொடர்ந்து விமான நிலையத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்த தாலிபான்கள்

விமான நிலையத்திற்கு வெளியே குவிந்த மக்கள் தாலிபான் படையினரின் கெடுபிடிகளுக்கு அஞ்சி செய்வதறியாது திகைத்து நின்றனர்.

விமான நிலைய பகுதியில் நிலவிய அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு தங்கள் நாட்டு பிரஜைகள் யாரும் அடுத்த உத்தரவு வரும் வரை காபூல் விமான நிலையம் வரவேண்டாம் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்தது.

இந்நிலையில், காபூல் விமான நிலையத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் கோரத் தாக்குதலுக்கு 13 அமெரிக்க படையினர் உள்ளிட்ட 73 பேர் இறந்தனர்.

ஐ.எஸ். தீவிரவாதிகளின் தாக்குதலைத் தொடர்ந்து ஏற்பட்ட அசாதாரண சூழலை அடுத்து காபூலில் சிக்கியிருந்த தங்கள் படை வீரர்களை பத்திரமாக வெளியேற்ற நினைத்த அமெரிக்கா, தாலிபான் ஆட்சியாளர்களுடன் ரகசிய உடன்படிக்கை மேற்கொண்டு அமெரிக்க படையினரை மீட்டது என்று அமெரிக்க செய்தி நிறுவனம் சி.என்.என். செய்தி வெளியிட்டிருக்கிறது.

விமான நிலையத்திற்கு வெளியில் குவிந்திருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் அமெரிக்க படையினர் சிக்கிக்கொள்ளாமல் இருக்க, தாலிபான் பாதுகாப்பு வீரர்களின் எண்களுக்கு அழைத்த அமெரிக்கர்கள், அவர்களின் உதவியுடன், யாருக்கும் தெரியாமல் ரகசிய வழியில் விமான நிலைய வளாகத்திற்குள் அனுப்பி வைக்கப்பட்டதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

தாலிபான்களுடன், அமெரிக்கா செய்துகொண்ட இந்த ரகசிய உடன்படிக்கை அந்நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.