க்னோ

கோரக்பூர் மருத்துவர் கஃபீல் கான் மீது அவர் நன்னடத்தை குறித்த புதிய விசாரணை  நடத்த உத்தரப்பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு கோரக்பூர் அரசு மருத்துவக் கல்லூரி  மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறை காரணமாக 60க்கும் மேற்பட்ட பச்சிளம் குழந்தைகள் மரணம் அடைந்தனர்.  மருத்துவ மனை சிலிண்டர் வழங்கியவருக்குத் தர வேண்டிய பாக்கித் தொகையைச் செலுத்தாததால் இந்த தட்டுப்பாடு ஏற்பட்டது.  மருத்துவக் கல்லூரி தலைவரான கஃபீல் கான் தனது சொந்தச் செலவில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் கொண்டு வந்து  குழந்தைகளைக் காப்பாற்றினார்.

அப்போது அந்த வார்டுக்கு கஃபீல் கான் பொறுப்பு ஏற்றிருந்தார். அவர் சரியான  நேரத்தில் ஆக்சிஜன் சிலிண்டர் இருப்பு பற்றி அரசுக்குத் தகவல் அளிக்காமை,  தனியாக மருத்துவமனை நடத்துதல், ஆக்சிஜன் சிலிண்டர் விற்பனையாளரிடம் லஞ்சம் பெற்றது உள்ளிட்ட 4 குற்றச்சாட்டுகளின் பேரில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.   அவர் கைது செய்யப்பட்டு மிகுந்த சட்டப்போராட்டத்துக்கு பிறகு தற்போது ஜாமீனில் வெளி வந்துள்ளார்.

கஃபீல் மீதான குற்றச்சாட்டுக்களை விசாரித்த விசாரணை அதிகாரி நான்கு குற்றச்சாட்டுகளில் இரு குற்றச்சாட்டுகளில் அவர் குற்றமற்றவர் என அறிக்கை அளித்துள்ளார்.   இது குறித்து முடிவை அரசு எடுக்க வேண்டும் எனவும் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.   இந்தக்  குற்றச்சாடுகளில் கஃபீல் கான் கடந்த 2017 ஆம் வருடம் வரை தனியார் மருத்துவமனை ஒன்றை கோரக்பூர் நகரில் நடத்தி வந்தது நிரூபிக்கப்பட்டுள்ளது.

நேற்று உத்தரப்பிரதேச மாநில மருத்துவக் கல்வி தலைமைச் செயலர் ரஜனீஷ் துபே,  “கஃபீல் கான் மீது 7 குற்றச்சாட்டுக்கள் உள்ளன.   அவற்றில் 4 குற்றச்சாட்டுகளின் விசாரணை முடிந்துள்ளன.   எனவே தற்போது புதிய விசாரணை அவருடைய நன்னடத்தை தொடர்பான புகார்கள் பற்றி நடைபெற உள்ளன.

அவர் அரசு மருத்துவர் பணியில் இருந்துக் கொண்டே தனியார் மருத்துவமனையை நடத்தி உள்ளார்.  அத்துடன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கும் போது அரசு குறித்துப் பல தவறான தகவல்களை ஊடகங்கள் மூலம் தெரிவித்து வருகிறார்.   இவை இரண்டும் அரசு விதிமுறைகளை மீறும் செயலாகும்.” எனத் தெரிவித்துள்ளார்.