சென்னை: தமிழகத்தில் இதுவரை 150 பேருக்கு S வகை மரபணு மாற்றம் கண்டறியப்பட்டு உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
சென்னையில் இனிமேல் தினசரி 25ஆயிரம் பரிசோதனை செய்யப்படும் என்றும், மீணடும், மக்கள் கூடும் பகுதிகளில் சோதனை தீவிரப்படுத்தப்படும் என்றும் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கூறினார்.
அதுபோல சென்னை மாநகராட்சியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஒவ்வொரு மண்டலத்திற்கும் 2 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் இதுவரை 150 பேருக்கு S வகை மரபணு மாற்றம் கண்டறியப் பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களை தொடர்ந்து தற்போது தொற்று பாதிப்பு சமூக பரவல் என்ற நிலையை அடைந்துள்ளது என கூறினார்.
அதைத்தொடர்ந்து செய்தியளார்களிடம் பேசிய சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி , சென்னையில் கொரோனா தொற்று பாதிப்பு சற்று அதி கரித்து வருகிறது. அதனால் காய்ச்சல், சளி போன்ற அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். சந்தேகம் ஏற்பட்டால் 1913 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம் என்றார்.
மேலும், தற்போது வேகமாக பரவி வரும் ஒமிக்ரான் தொற்று குறித்து அலட்சியமாக இருக்கக்கூடாது. ஒருநாள் தாமதித்தாலும் இந்த தொற்று நூற்றுக்கணக்கானவர் களுக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும். இதை தடுக்கும் வகையில், தினசரி கொரோனா பரிசோதனை 25 ஆயிரமாக உயர்த்தப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி, மார்க்கெட், வணிக வளாகங்களில் மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. கடை உரிமையாளர்கள் பணியாற்றும் ஊழியர்களுக்கு அறிகுறி இருந்தால் உடனடியாக பரிசோதனைக்கு அவர்களை உட்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
கொரோனா தொற்று மருத்துவமனை வழியாக நோய் அதிகம் பேருக்கு பரவுவது தெரிய வந்துள்ளதால், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் உதவியாளர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட இருப்பதாகவும், பள்ளி, கல்லூரி விடுதிகளிலும் பரிசோதனை நடத்தப்படும் என்றவர், பள்ளிகளில் கூட்டமாக சேர்ந்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்றும், முககவசத்தை மூக்கு வரை முழுமையாக அணிய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
பொதுமக்கள் அவசியமின்றி வெளியூர் பயணத்தை தவிர்க்க வேண்டும். பஸ், ரெயில்களில் செல்லக்கூடியவர்கள் முககவசம் கட்டாயம் அணிய வேண்டும். அடுத்து வருகின்ற 5 நாட்கள் முக்கியமாக இருப்பதால் மாநகராட்சியுடன் காவல்துறை இணைந்து கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடுகிறோம். பொது இடங்களில் முககவசம் அணியாமல் இருந்தால் உடனடியாக அபராதம் விதிக்கப்படும் என்றார்.
பின்னர் செய்தியளார்களை சந்தித்த சென்னை மாநகர காவல்ஆணையர் சங்கர் ஜிவால், சென்னை மாநகராட்சியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஒவ்வொரு மண்டலத்திற்கும் 2 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என்றும், பொதுமக்கள் முகக்கவசம் அணியாமல் வெளியே வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.