மயிலாடுதுறை: கள்ளச் சாராய வியாபாரிகளால் இளைஞர்கள் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அந்த பகுதி காவல்துறையினர் 19பேர் கூண்டோடு இடமாற்றம் செய்து காவல்துறை தலைவர் உத்தரவிட்டு உள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கள்ளச்சாராய வியாபாரிகளால் இளைஞர் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில், அந்த பகுதியில் உள்ள காவல்துறையில் பணியாற்றி வந்த 19 காவல்துறையினரும் கூண்டோடு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
ஏற்கனவே கள்ளக்குறிச்சி, கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்த அந்த பகுதிகளைச் சேர்ந்த 69 பேர் பலியானது நாடு முழுவதும் விவாதப்பொருளாக மாறிய நிலையில், அடுத்து, மயிலாடுதுறை பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனையை தட்டிக்கேட்டதால், இரு இளைஞர்கள் கள்ளச்சாராய வியாபாரிகளால், கொடூரமாக கொலை செய்யப்பட்டு உள்ளனர். இது மீண்டும் தமிழ்நாடு அரசு மற்றும் காவல்துறையினர்மீது கடும் விமர்சனங்களை எழுப்பியது.
இநத் நிலையில், மயிலாடுதுறை அருகே சாராய வியாபாரிகளால் இளைஞர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் பெரம்பூர் காவல்நிலைய போலீசார் கூண்டோடு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
முன்னதாக மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட முட்டம் கிராமத்தில் கடந்த மாதம் 14-ம் தேதி சாராய வியாபாரிகளால் இரண்டு இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த பெரம்பூர் போலீசார், ராஜ்குமார், தங்கதுரை, மூவேந்தன், முனுசாமி, மஞ்சுளா ஆகிய 5 பேரை கைது செய்தனர். இந்த இரட்டை கொலை சம்பவத்தின் எதிரொலியால் பெரம்பூர் காவல் நிலைய ஆய்வாளர் நாகவள்ளி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.
தொடர்ந்து எஸ்பி தனிப்பிரிவு போலீஸ் பிரபாகர், உதவி ஆய்வாளர்கள் மணிமாறன், சங்கர் ஆகியோரும் அடுத்தடுத்து பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இந்நிலையில் பெரம்பூர் காவல் நிலையத்தில் பணியாற்றிய 19 போலீசாரை கூண்டோடு பணியிட மாற்றம் செய்து மாவட்ட எஸ்பி. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
சட்டம் ஒழுங்கு? கள்ளச்சாராய விற்பனையை தட்டிக்கேட்ட இரு இளைஞர்கள் படுகொலை! இது மயிலாடுதுறை சம்பவம்….