சென்னை: சென்னை ஓஎம்ஆர் சாலையில், நள்ளிரவில் மதுபோதையில் கார் ஓட்டி வந்து சாலை ஓரத்தில் நடந்துசென்றுகொண்டிருந்த இரண்டு இளம்பெண் மென்பொறியார்கள் மீது மோதிய பிரபல ஓட்டல் அதிபரின் 20வயது மகன் கைது செய்யப்பட்டுள்ளார். கார் மோதியதில் பலத்த காயம் அடைந்த இளம்பெண்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், மற்றொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சம்பவத்தன்று இரவு சென்னை சோழிங்கநல்லூரைச் சேர்ந்த பிரபல ஓட்டல் அதிபர் பூபாலகுமாரின் மகன் 20 வயதான மோத்தீஸ்குமார் என்பவர் தனது நண்பர்களுடன் பார்ட்டிக்கு சென்று மது போதையில் காரை அதிவேகமாகவும், தாறுமாறாகவும் ஓட்டி வந்துள்ளார். அப்போது, பிரபல மென்பொருள் நிறுவனத்தில் இரவு பணி முடிந்து, வெளியே வந்த இரு பெண் மென்பொறியாளர்கள், வாகனங்களுக்காக சாலையோரத்தில் நின்றுகொண்டிருந்தபோது, அவர்கள்மீது வேகமாக வந்த கார் மோதியது.
இந்த விபத்தில் இரு இளம்பெண்களும் பலியாகி உள்ளனர். விசாரணையில், ஒரு இளம்பெண் கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், அக்காததாரா பகுதியைச் சேர்ந்தவர் ரவி மணி. இவரது மகள் ஸ்ரீலட்சுமி (23) என்பத தெரிய வந்துள்ளது. மற்றொருவர், ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், ரெட்டிகாரப்பள்ளி பகுதியைச் சேர்ந்த சுரேந்திர ரெட்டி என்பவரது மகள் லாவண்யா (23) என்பது தெரிய வந்துள்ளது.
இந்த விபத்தை பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள், சாலையில் சென்றவர்கள் உடனே விபத்தை ஏற்படுத்திய காரில் இருந்த வாலிபரை பொதுமக்கள் பிடித்து வைத்து போலீசுக்கு தகவல் அளித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்தக்கு வந்த ஆம்புலன்ஸ் இரு இளம்பெண்களையும் சென்னை ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் ஸ்ரீலட்சுமி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இதைத்தொடர்ந்து லாவண்யாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி லாவண்யாவும் நேற்று காலை உயிரிழந்தார்.
இதுதொடர்பாக விசாரணை நடத்திய பள்ளிக்கரனை போலீசாரி, காரை ஓட்டி வந்த தொழிலதிபர் மகனை கைது செய்தனர். அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில், அவர் மது அருந்தியிருப்பது உறுதியானது. இந்த சம்பவம் சக ஊழியர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நகரத்திற்குள் அப்பாவி பொதுமக்களை, இரவு நேரங்களில் வாகனங்களை மடக்கி ஊது ஊது என ஊதச்சொல்லி, போக்குவரத்து காவல்துறையினர் நடவடிக்கை எடுத்த வரும் நிலையில், பிரபலங்கள் இரவு போதை பார்ட்டிகளில் ஈடுபட்டு, தாராறுமாறாக வாகனங்களை ஓட்டி வரும், இசிஆர், ஓஎம்ஆர் சாலைகளில், வாகன தணிக்கை செய்வார்களா என பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.