ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் மற்றும் வெடிபொருளுடன் கூடிய டிரோனும் பாதுகாப்பு படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டது.
ஜம்மு காஷ்மீருக்குள் நுழைய முயற்சிக்கும் பயங்கரவாதிகளின் நடமாட்டம் தொடர்ந்து வருகிறது. அவர்களை அவ்வப்போது பாதுகாப்பு படையினர் வேட்டையாடி வருகின்றனர்.கடந்த 7 மாதத்தில் 700க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டு உள்ளனர். இந்த நிலையில், தற்போது பயங்கரவாதிகள் டிரோன் மூலம் தாக்குதல் நடத்த திட்டமிட்டு வருகின்றன. ஆளில்லா விமானம் எனப்படும் டிரோன்கள் மூலம் வெடிமருந்துகளை அனுப்பி வெடிக்கச் செய்து வருகின்றனர். சமீப காலமாக அங்கு டிரோன்கள் பறப்பதும், அதை இந்திய ராணுவத்தினர் சுட்டு வீழ்த்துவது அதிகரித்து உள்ளது.
இந்த நிலையில், ஜம்மு காஷ்மீரின் சோப்பூர் பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதுபோல ஜம்மு – காஷ்மீரில் பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள, கனச்சக் என்ற இடத்தில் வெடிபொருள்களுடன் ஒரு ட்ரோன் பறந்துள்ளது. இந்த ட்ரொனை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.
அந்த டிரோனை ஆய்வு செய்த பாதுகாப்பு படையினர், அதில் வெடிபொருட்கள் இருந்தை கண்டறிந்தனர். உடனே, அதை அகற்றியதுடன் மேலும் விசாரணை நடத்திவருகின்றனர். இதையடுத்து, ஜம்மு-காஷ்மீர் டிஜிபி தில்பாக் சிங் சமீபத்தில் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு, பயங்கரவாத அமைப்புகள் தொடர்ந்து டிரோன்களைப் பயன்படுத்த முயற்சிப்பதால் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.