சேலம்: மக்கள் அதிகம் நடமாடும் சேலம் நான்கு ரோடு, பழைய பேருந்து நிலையம் பகுதிகளில் நடைபெற்ற  கொள்ளைச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  இதுகுறித்து சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு காவல் துறையினர் விசாரணை  நடததி வருகின்றனர்.

சேலம் நான்கு ரோடு பகுதியில் பிரபல தனியார் மருந்தகம் ஒன்று இயங்கி வருகிறது.  அங்கு வழக்கம்போல இரவு 10 மணி அளவில் மருந்தகத்தை பூட்டிவிட்டு கடை ஊழியர்கள் சென்றறுவிட்டனர். சம்பவத்தன்று இரவு   கொள்ளையர்கள் கடையின் ஷட்டரின் பூட்டை உடைத்து, அதன் ஒருபக்க ஷட்டரை தூக்கி உள்ளேச் சென்று,  கடையிலிருந்து ரூ.18 ஆயிரம் பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.

இதுதொடர்பாக புகார் கொடுத்த நிலையில்,  பள்ளப்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது, நான்கு பேர் கொண்ட கும்பல் ஷட்டரின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து திருடுவது பதிவாகியுள்ளது.

அன்றைய தினம்,   சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அரிசி மண்டியிலும் கொள்ளை நடந்துள்ளது.  நாமக்கல் மாவட்டம் பெரியமணலியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு சொந்தமான அந்த அரிசி மண்டியை  வழக்கம் போல் தொழிலாளர்கள் இரவு  பூட்டி விட்டு சென்றனர்.  ஆனால், இரவு அரிசி மண்டியின் ஷட்டரின் பூட்டு உடைத்து ரூ.12 ஆயிரம் திருடிச் செல்லப்பட்டுள்ளது தெரியவ்நதது.

இதுதொடர்பாக கடை உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில், சேலம் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். கடைகளில் வைக்கப்பட்டு உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகி உள்ள காட்சிகளைக் கொண்டு காவல் துறையினர் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்‌‌.

ஒரே நாளில் இரு கடைகளின் ஷட்டர் உடைக்கப்பட்டு, பணம் திருடப்பட்டு உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இரு இடங்களிலும் கொள்ளை சம்பவங்களை அரங்கேற்றியது ஒரே கும்பலாகத்தான் இருக்கும் என்று சந்தேகப்படும் காவல்துறையினர் அவர்களை தேடும் பணியை முடுக்கிவிட்டுள்ளனர்.

[youtube-feed feed=1]